ஃப்ரிட்ஜில் மனைவி தலையை வைத்துவிட்டு, கள்ளக்காதலனை தேடினாரே கணவர்! அவருக்கு இப்ப என்னாச்சு தெரியுமா?

சென்னை: சென்னை: மனைவி செய்த ஒரு பச்சை துரோகம் இன்று ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டது.. மனைவியை கணவன் கொன்றதுடன், அந்த சடலத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகள், இதுகுறித்து போலீசாரிடம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள் என அஸ்ஸாம் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.. இப்போது அந்த கொலைகார கணவனுக்கே என்ன நடந்தது தெரியுமா?

கவுகாத்தியின் பெல்டோலா-பசிஸ்தாபூர் பகுதியில் வசித்து வருகிறார் ரியா தலுக்தார் கோஸ்வாமி என்ற பெண்.. இவரது கணவர் பெயர் ராமானுஜ் கோஸ்வாமி.. தம்பதி இருவரும் அங்குள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள்.

ஃபேன்சி பஜாரில் உள்ள ஏசி மார்க்கெட் பகுதியிலுள்ள பொட்டிக்கில் வேலை செய்து வந்துள்ளார் ரியா.. அதேபோல ராமானுஜ், ஊபர் கேப்பில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். உயிருக்குயிராக காதலித்து கடந்த வருடம்தான், திருமணம் செய்துள்ளனர்.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வெடிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 3ம் தேதி வழக்கம்போல் சண்டை வந்துள்ளது.. 2 பேருமே ஒருவரையொருவர் திட்டி தீர்த்துக் கொண்டனர்.. ஆனால், வாக்குவாதம் நீடித்ததால்,ராமானுஜ் ஆத்திரமடைந்து ரியாவை கொடூரமாக அடித்து கொன்றுவிட்டு, வீட்டையும் வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

ரியாவின் அலறல் சத்தம் கேட்டதாக கூறிய அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையும் கவனித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் தலை இல்லாத உடல் கிடந்தது. ஃப்ரிட்ஜுக்குள் கருப்பு பாலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ரியாவின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது. மேலும் அவரது சில விரல்களும் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜை தேடி வந்த நிலையில், அவர் ஹதிகான் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரியாவை நான் மிகவும் விரும்பினேன்.. ஆனால், அவள் என்னை விட்டுவிட்டு, இன்னொருவருடன் தொடர்பில் இருந்தார்.. அதை பற்றி கேட்டதால்தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ரியாவை கொன்றுவிட்டேன்” என்று பதட்டமேயில்லாமல் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார்.. மனைவியை கொன்றதற்காக எந்த வருத்தமும் ராமானுஜிடம் காணப்படவில்லையாம்..

அதுமட்டுமல்ல, கடந்த 8ம் தேதி கொலை நடந்த இடத்திற்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.. அந்த வீட்டில் காலி மது பாட்டில்கள் கிடைத்ததால், சம்பவத்தின்போது ராமானுஜ் குடிபோதையில் இருந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.

அப்போது அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய ராமானுஜ், “அவள்தான் சார் எனக்கு துரோகம் பண்ணிட்டா.. அந்த கொலைக்கு மன்னிப்பு கேட்கும் எண்ணம் என்னிடம் இல்லை.. இப்போ என்னை ஜெயிலில் தள்ளினாலும், ஒருநாள் வெளியே வந்து, என் மனைவியின் கள்ளக்காதலனை கண்டிப்பாக கொலை செய்வேன்” என்று பகிரங்கமாகவே சொன்னாராம்.

இப்படியொரு பரபரப்பான விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று எதிர்பாராத திருப்பமாக ராமானுஜே உயிரிழந்துவிட்டார்.

கவுகாத்தி அரசு மருத்துவமனையில் மெடிக்கல் டெஸ்ட் முடிந்த பிறகு, ராமானுஜை ஹதிகான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது நரகசுர் பஹார் பகுதிக்கு அருகே போலீஸ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராமானுஜ் போலீசாரை தாக்கிவிட்டு வாகனத்தில் இருந்து திடீரென கீழே குதித்துவிட்டார்..

அங்கே சாலையோர பள்ளத்திலிருந்து விழுந்து விட்டதால், ராமானுஜ் உடம்பெல்லாம் பலத்த காயங்கள் ஏற்பட்டன.. உடனடியாக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவிதது விட்டனர்.

மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, இன்னும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்த ராமானுஜின் இந்த தற்கொலை, இந்த வழக்கில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ராமானுஜ் எப்படி போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்றார்? போலீசாரை தாக்கியதற்கான காரணம் என்ன? போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்ததா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன.. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறதாம்..!!!