‘ஏய்யா, எப்பவும் நீ இப்படித்தான் பேசுவியா?’: நேரில் சந்தித்த டி.ஆர்; ஆச்சரிய கேள்வி எழுப்பிய இளையராஜா

இளையராஜா போன்ற ஒரு இசை மேதையைப் பற்றி பேசும்போது, அவருடைய சாதனைகளை ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அவருடைய இசையும் பாடல்களும் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களின் மனதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒரு பாடலைப் பற்றி பேசும்போது, அந்தப் பாடலின் வரிகள் மட்டுமல்ல; அதில் இருக்கும் இசை, உணர்வு, குரல், பின்னணி இசை என ஒவ்வொன்றும் தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. அதனால்தான் இளையராஜாவின் பாடல்களை மக்கள் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறார்கள். ஒரு பாடலைப் பாடுவதற்கு முன்பாக அவர் கூறும் சிறிய விஷயங்கள்கூட பாடலின் வெளிப்பாட்டை மாற்றிவிடும். 

ஒரு வார்த்தையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும், எந்த இடத்தில் மென்மையாகப் பாட வேண்டும் என்பதைக் கூட மிகத் துல்லியமாக அவர் கவனிப்பார். அவருடைய இசையில் பாடியவர்கள் பலரும் இதே அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். இளையரரிஜா இசையில் பலர் பாடி இருந்தாலும், அவரை தன் இசையில் பாட வைத்தவர் டி.ராஜேந்தர். 

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் டி.ஆர். பல ஹிட் படங்களை இயக்கியுள்ள இவர், பல பாடல்களையும் பாடியுள்ளார், தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர் டி.ஆர்,தான். அதேபோல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசைமைத்துள்ளார். குறிப்பாக, விஜயகாந்த் நடித்த கூலிக்காரன், மோகன் நடித்த கிளிஞ்சல்கள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

அந்த வகையில் சாய்ராமணி என்பவர் இயக்கிய கன்னடத்து பைங்கிளி என்ற படத்திற்கான பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் டி.ஆர். இந்த படத்தில் ஒரு காதல் தோல்வி பாடலை இளையராஜா பாடினால் சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளர் விரும்ப, அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கள் நான் பாட வைக்கிறேன் என்று டி.ஆர், கூறியுள்ளார். அதன்படி இளையராஜாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்த டி.ஆர் அவரை சந்தித்து பேசியுள்ளார். 

அப்போது டி.ஆர் நான் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அதில் பாடல்களும் நான் தான் எழுதி இருக்கிறேன். அதில் ஒரு காதல் தோல்வி பாடலை நீங்கள் பாட வேண்டும் என்று சொல்ல, இதை கேட்ட இளையராஜா, என்னப்பா எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறீயா என்று கேட்க, எல்லாம் தெரிந்து தான் பேசுகிறேன் அய்யா. நீங்கள் தான் பாட வேண்டும் இசை, பாடல் வரிகளை பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பாடலாம். இல்லை என்றால் அதில் திருத்த வேண்டியவற்றை சொல்லுங்கள் திருத்தலாம் என்று கூறியுள்ளார். 

மேலும், உங்களுக்கு முழு பாடலும் பிடித்தபிறகு பாடலை பதிவு செய்யலாம் என்றும், உங்கள் மகன்கள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையில் பாடி இருக்கிறீர்கள். அதில் யுவன் இசையில் சிலம்பாட்டம் படத்தில் நீங்கள் பாடிய மச்சா மச்சா பாடல் என் மகனுக்காவும் பாடியிருப்பீர்கள். அதேபோல் இந்த பாடலை எனக்காக பாடுங்கள் என்று டி.ஆர். அடுக்கு மொழியில் அவரை வாழ்த்தி கேட்க, நீ எப்போவும் இப்படித்தான் பேசுவீயாயா  என்று கேட்டுள்ளார். 

அதன்பிறகு நான் பிஸியா இருக்கேன் நேரம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால், டைம் பார்த்து சொல்கிறேன். பாடிவிடலாம் என்று கூறியுள்ளார். இந்த தகவலை டி.ஆர்.டாக்கீ்ஸ் யூடியூப் சேனலில் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Source link