சில்லறை காசு மாதிரி ரூ.55 கொடுங்க; மாதம் ரூ.3,000 பென்சனாக அள்ளுங்க: மத்திய அரசின் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா ?

சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதியோர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டம் ‘பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா’ (PM-KMY). 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது வெற்றிகரமாக தனது 7-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இத்திட்டத்தின் முழு விவரங்களை எளிமையாகப் பார்ப்போம்.

பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா என்றால் என்ன?

இது சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு உருவாக்கிய ஓய்வூதியத் திட்டமாகும்.

ஆகஸ்ட் 1, 2019 அன்று நிலப் பதிவேடுகளில் பெயர் உள்ள, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, 2 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் வைத்துள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் இத்திட்டத்துக்குத் தகுதியானவர்கள்.

உறுதியான ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

விவசாயிகளுக்கு வயது 60 நிறைவடைந்த பிறகு, மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறும் விவசாயி காலமானால், அவரது வாழ்க்கைத் துணைவருக்கு (Spouse) அதில் 50 சதவீதத் தொகை (ரூ.1,500) குடும்ப ஓய்வூதியாகக் கிடைக்கும். இது வாழ்க்கைத் துணைவருக்கு மட்டுமே பொருந்தும்.

மாதாந்திர பங்களிப்புத் தொகை எவ்வளவு?

விண்ணப்பதாரர் தனது 18 வயது முதல் 40 வயது வரை, வயதுக்கேற்ப மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

நாம் செலுத்தும் தொகைக்கு இணையாக சமமான 50 சதவீதத் தொகையை மத்திய அரசும் சேர்ந்து வரவு வைக்கிறது.

பணம் செலுத்த நினைவூட்டல்கள் தேவையில்லை; பயனாளியின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே (Auto-debit) தொகை பிடிக்கப்படும் வசதி உள்ளது.

விருப்பமுள்ள விவசாயிகள், தங்களுக்குக் கிடைக்கும் பிஎம் கிசான் (PM-KISAN) சம்மான் நிதித் தொகையிலிருந்தே இப்பங்களிப்பைச் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணைவது எப்படி?

அருகிலுள்ள பொதுச்சேவை மையத்தை (CSC – Common Service Center) அணுகி ஆதார் அட்டை, நில ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் இத்திட்டத்தில் எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

முதியோர்காலத்தில் எவரின் தயவுமின்றி மாதம்தோறும் உறுதியான வருமானம் பெற இத்திட்டம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தகுதியான விவசாயிகள் உடனடியாகப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

Source link