துபாயில் சமையலறை கழிவிலிருந்து இயற்கை உரம்.. கிரீன் குளோப் அமைப்பின் அசத்தல் பயிலரங்கம்!

துபாய்: துபாய் கலாச்சாரத் துறையின் (Dubai Culture) ஆதரவோடு, ‘ஜெனரேஷன் ஷேப்பர்’ (Generation Shaper) என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம் (Family Sustainability Workshop) துபாயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்துல் காதர் அவர்களின் முயற்சியில், கிரீன் குளோப் அமைப்புடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த பயிலரங்கத்தின் முக்கிய நோக்கம் “சமையலறை கழிவுகளிலிருந்து உயிருள்ள மண்” என்பதாகும். பொதுவாக நாம் அன்றாடம் சமையலறையில் தூக்கி எறியும் காய்கறி தோல்கள், பழக்கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை வீணாக்காமல், அவற்றை எவ்வாறு வளம்மிக்க இயற்கை உரமாக்குவது என்பது குறித்து நேரடி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மண்ணின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதும், குப்பைகளைக் குறைப்பதும் ஒவ்வொரு குடும்பத்தின் கடமை என்பதை எளிய முறையில் இந்த நிகழ்வு உணர்த்தியது.

இந்த பயிலரங்கில் பொதுமக்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவ-மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் மிகவும் ஆர்வமாகப் பங்கேற்றனர். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு இயற்கை பாதுகாப்பு மற்றும் பசுமை வாழ்க்கை முறை குறித்த எண்ணத்தை விதைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அப்துல் காதர் அவர்கள் வீட்டில் எளிதாகச் செய்யக்கூடிய இயற்கை உர தயாரிப்பு முறைகளை நேரில் செய்து காட்டினார். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது குறித்து விரிவாகப் பேசினார்.

நிகழ்ச்சியில் துபாய் மாநகராட்சியைச் சேர்ந்த பெண் அதிகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வீடுகளில் செடிகள் மற்றும் மரங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என்பது குறித்து பயனுள்ள ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பங்கேற்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் துபாய் மாநகராட்சி சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பயிலரங்கை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரஸூல், அப்துல் ரஹ்மான், தாஹிர், பீர் முஹம்மது மற்றும் பல தன்னார்வலர்கள் இணைந்து திறம்பட ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, துபாய் கலாச்சாரத்துறைக்கும், வருகை தந்த அனைத்துப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.