சென்னை: வன்னியர் சமூகத்தின் அரசியல் அடையாளம் என்றால் நீண்ட காலமாக முதலில் நினைவுக்கு வருவது மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ்தான்.. அந்த இடத்தை அவருக்குப் பிறகு யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி, இப்போது அந்த சமூகத்துக்குள்ளேயே மெதுவாக எழத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழக அரசியலில் வன்னியர் சமூகத்தை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக ஒருங்கிணைத்ததில் டாக்டர் ராமதாஸுக்கு முக்கிய பங்கு உண்டு. அவரது அரசியல் பயணத்தில் பல அதிரடியான முடிவுகள் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
கூட்டணி கணக்குகள் தொடங்கி, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் வரை, வன்னியர் சமூகத்தின் குரலாக ராமதாஸ் முன்னெடுத்த பல அரசியல் நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதன் காரணமாகவே, ராமதாஸ் மீது கட்சி வேறுபாடுகளை தாண்டி பல அரசியல் தலைவர்களும் ஒரு மரியாதையை எப்போதுமே வைத்திருக்கிறார்கள்.. எனினும், வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் தற்போது முன்புபோல நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை… தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து மட்டும் அவரது அறிக்கை வந்து கொண்டிருக்கிறது.
ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட அதிகார மோதல் முடிவுக்கு வந்து, பாமகவை முழுமையாக அன்புமணியிடமே ஒப்படைத்து விட்டார் ராமதாஸ். இதனால் இவர்களுக்கிடையே நடந்து வந்த மோதல்களும் முற்றுப் பெற்று விட்டன..
ஆனால், வன்னியர் சமூக ராமதாசுக்கு பிறகு அவரது மகன் அன்புமணியை ஒரு அரசியல் தலைவராக பார்க்கிறதே தவிர, தங்கள் சமூகத்தின் தலைவராக நினைக்கவில்லை ஏற்கவும் தயாராக இல்லையாம்.. இதனால், ராமதாசுக்கு பிறகு வன்னியர் சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, வன்னியர் சமூகத்தின் தலைவராக உருவெடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடிக்கு எதிரான கிளர்ச்சி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம்.
இதற்காக வன்னியர் சமூகத்திலுள்ள தொழிலதிபர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் ஆளுமைகள் பலரிடமும் சண்முகம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவர்களின் ஆதரவும் சண்முகத்திற்கு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், வன்னியர் சமூகத்தின் தலைவராக வரத்துடிக்கும் சி.வி.சண்முகம், இதற்காக முதல்கட்டமாக மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ளார்.. அதன்படி, வன்னியர் சமூகத்தின் மிகப் பெரிய தலைவராக இருந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16-ந்தேதி, அதாவது நாளைய தினம், சென்னையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளார் சிவி சண்முகம்..
அப்படி சிவி சண்முகம் வரும்போது, அவரை வரவேற்கும் விதமாக வன்னியர் சமூகத்தினரை சிலைக்கு அருகே பெரிய அளவில் திரட்டவும் யோசித்துள்ளனராம் அவரது ஆதரவாளர்கள். வன்னியர் சமூகத்தினரை திரட்டி அச்சமூகத்திற்கான அரசியலை சி.வி. சண்முகம் முன்னெடுத்தால், அது, பாமகவுக்கு மட்டுமல்ல, அதிமுக, திமுக கட்சிகளுக்கும் மிரட்டலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அரசியலில் ஈடுபடாத வன்னியர் சமூக அமைப்புகளின் தலைவர்கள்.
டாக்டர் ஐயாவுக்கு பிறகு உருவாகும் அரசியல் வெற்றிடத்தில், சிவி சண்முகம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!
– நமது சிறப்பு நிருபர் எழில்
