அதிமுகவுக்கு ஆதரவு இல்லையா? சந்திக்க மறுக்கும் அன்புமணி.. இடைத்தேர்தலில் தவெக ஆடும் கேம்!

சென்னை: 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி தயக்கம் காட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவினர் நேரில் சந்திக்க நேரம் கேட்ட போதும், அன்புமணி இதுவரை சந்திக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் மதுராந்தகம் தொகுதியில் தவெக வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் திமுக, தவெக, அதிமுக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் களமிறங்குகின்றன. ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அடுத்தக்கட்ட பணிகளை கட்சிகள் தொடங்கி இருக்கின்றன. இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றதால், மீண்டும் வெல்ல வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுக தாராபுரம் தொகுதியில் வலுவாக இருந்தாலும், மதுராந்தகம் தொகுதியில் பாமகவின் வாக்கு வங்கியை நம்பியே களமிறங்கி இருக்கிறது. ஆனால் பாமகவை நேரில் சந்தித்து அதிமுக இதுவரை ஆதரவு கேட்கவில்லை. இதற்கு காரணம் முதலில் அன்புமணி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது விசாரிக்கையில் அன்புமணி அதிமுகவினரை சந்திக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அன்புமணியை சந்திக்க அதிமுகவினர் நேரம் கேட்ட போதும், இதுவரை அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் இருந்து அன்புமணி பின்வாங்க முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு சட்டசபைத் தேர்தலின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தவெக மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் பாமக நெருக்கம் காட்டி வருகிறது. செளமியா அன்புமணியின் தந்தைக்கு தகைசால் விருது அறிவிக்கப்பட்ட போதே, தவெக – பாமக நெருங்கி வருவதாக பேச்சுகள் எழுந்தன. தற்போது இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தால், அது தவெகவுக்கு சாதகமான சூழலை தொகுதியில் உருவாக்கும்.

இதன் மூலமாக பாமக விரைவில் அமைச்சரவையில் இடம்பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் வெற்றிக்கு தாங்களே காரணம் என்று பாமகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் பாமக அடுத்த தேர்தலுக்கு தங்களின் பேர வலிமையை அதிகரிக்க இப்படியான பணிகளை தொடங்கிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.