சென்னை: சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில் ரூ. 45,00,000 மதிப்பிலான கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதத்தில் டெண்டர் கோரப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. “த.வெ.க. அரசின் முதல் டெண்டர் முறைகேடு இதுதான்” என்று கூறி, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறப்போர் இயக்கம் இந்த வீடியோவுடன் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுச்சதி செய்து பணிகளை முடித்துத் திறப்பு விழா நடத்தியுள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதத்தில் டெண்டர் போட்ட அவலம் நடந்துள்ளது. ‘ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம்’ என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகளைச் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதலமைச்சர், லஞ்ச ஒழிப்புத் துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா?” என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
அறப்போர் இயக்கம் என்பது தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் சமூக அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும், சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதும் இவ்வமைப்பின் முதன்மைப் பணியாகும். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜெயராம் வெங்கடேசன் செயல்பட்டுவருகிறார்.
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… pic.twitter.com/YxxeSJnoZt
தாம்பரம் மாநகராட்சி டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
“நண்பர்களே வணக்கம், தவெக ஆட்சியில் ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால், முதல்வர் விஜய் அமைச்சராக இருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் (Municipal Administration and Water Supply Department) கீழ் வரக்கூடிய தாம்பரம் மாநகராட்சியில் எப்படி ஒரு மிகப்பெரிய டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளோம். இதற்கான புகாரை அறப்போர் இயக்கம் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மீது முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?
இந்த டெண்டர் முறைகேடு இரண்டு ஒப்பந்தங்களில் நடந்துள்ளது. ஜூலை 29-ஆம் தேதி அமைச்சர் சரத்குமார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் IAS ஆகியோர் இணைந்து பெருங்களத்தூர் ரவுண்டானா பாலப் பகுதியில் அசோக சக்கர சிலையைத் திறந்துவைக்கிறார்கள். ஜூலை 29-ஆம் தேதி திறந்துவைத்துள்ளதாக அமைச்சர் சரத்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்திலும், தாம்பரம் மாநகராட்சியும் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளன.
ஆனால், இந்த அசோகத் தூண் சிலைக்கான டெண்டரே ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் கோரப்பட்டுள்ளது. சிலையையே திறந்து வேலையை முடித்த பிறகு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டு, யாரோ போட்டிபோடுவது போல ஒரு வேடமிட்டு, ஆகஸ்ட் 24-ஆம் தேதிதான் டெண்டர் முடிவடைவது போல் காட்டியுள்ளார்கள். அதைவிட வேடிக்கை என்னவென்றால், இந்த டெண்டர் பணியை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். இந்த டெண்டர் கோரும் அதிகார அமைப்பாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருக்கக்கூடிய IAS அதிகாரி பாலச்சந்திரன் செயல்பட்டுள்ளார்.
இது ஒன்று மட்டும் கிடையாது; சிட்லப்பாக்கம் ஏரியில் தண்ணீரைச் சேமிப்போம் என்பதற்கான ஒரு சிலையையும் அமைச்சர் சரத்குமார் திறந்துவைத்துள்ளார். அதற்கும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு டெண்டர்களிலுமே ஒப்பந்தங்களை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள் (Fixed). அசோகத் தூண் சிலையின் மதிப்பு ரூ. 27,30,000; ‘தண்ணீரைச் சேமிப்போம்’ சிலையின் மதிப்பு ரூ. 18,60,000. ஒட்டுமொத்தமாக ரூ. 45 லட்சத்திற்கான டெண்டர்களை முன்கூட்டியே முடிவுசெய்து சதி செய்துள்ளார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆணையர் பாலச்சந்திரன் IAS, அமைச்சர் சரத்குமார் மற்றும் தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளித்தால் அதுவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
அறப்போர் இயக்கம் விரிவாக இன்னொரு பதிவில் முறைகேடு குற்றச்சாட்டை விரிவாக கூறியுள்ளது. அந்த பதிவில் கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
*ஒப்பந்தம் 1 – பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):*
இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
*ஒப்பந்தம் 2 – சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):*
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை “To_be_opened” என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை
3.DVAC கிரிமினல் வழக்கு .
4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
