டெல்லி: அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் அதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ப்ரீத்தி ஆகியோர், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தெற்கு குஜராத்தில் உள்ள ஸ்ரீமத் ராமச்சந்திரா மிஷன் தரம்பூர் ஆசிரமத்திற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த பயணத்தின் போது, அவர்கள் ஆசிரமத்தின் நிறுவனர் குருதேவ்ஸ்ரீ ராகேஷ்ஜி அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
குருதேவ்ஸ்ரீ ராகேஷ்ஜி-ஐ சந்தித்த கௌதம் அதானி தம்பதியினர், அவரிடம் இருந்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின்போது குருதேவ்ஸ்ரீ ஆன்மீக பயிற்சிக்கும், சுயநலமற்ற சேவைக்கும் உள்ள தொடர்பை விவரித்தார்.ஆசிரமத்தில் உள்ள, உலகிலேயே மிக உயரமான ஸ்ரீமத் ராமச்சந்திரஜியின் சிலைக்கு பாத பூஜை செய்ததை தமக்கு நேர்ந்த ஒரு அழகான நெகிழ்ச்சியான அனுபவம் என்று கௌதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
ஆசிரமத்தின் தியான வளாகமான ராஜ்சபா கிரிஹாவில் நடந்த ஆன்மீக சொற்பொழிவிலும் அவர்கள் கலந்து கொண்டனர். அதானி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமத் ராமச்சந்திரா மிஷனின் தொண்டு நிறுவனமான ஸ்ரீமத் ராமச்சந்திரா லவ் அண்ட் கேர் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவதை குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது.
டாக்டர் ப்ரீத்தி அதானி, பழங்குடியின பெண்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தை பார்வையிட்டு அங்குள்ள பெண்களுடன் கலந்துரையாடினார்.
ஆசிரமத்தின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கும் திட்டத்தில் பங்கேற்றார். அதோடு அதானி அறக்கட்டளையின் கண் விழிப்புணர்வு திட்டங்களுடன் இணைந்து பயணிப்பது குறித்தும் விவாதித்தார்.
தெற்கு குஜராத்தில், 355 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சர்வதேச ஸ்ரீமத் ராமச்சந்திரா மிஷன் தலைமையகம்.. 1994 ஆம் ஆண்டு குருதேவ்ஸ்ரீ ராகேஷ்ஜியால் நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் ஆன்மீக வழிகாட்டியாக போற்றப்படும், ஆன்மீக குருவான ஸ்ரீமத் ராமச்சந்திராஜியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகிறது. இது 6 கண்டங்களில் 142க்கு மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
கெளதம் அதானி இந்த ஆண்டு ஏற்கனவே அயோத்தி, கொல்கத்தா, தாரங்கா ஹில்ஸ், சமணக்கோயில் மற்றும் தனது 40 வது திருமண நாளை ஒட்டி கேதார்நாத் ஆகிய ஆன்மீக தலங்களுக்கும் சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
