“எல்லோருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…”- தனுஷ் அரசியல் வருகை குறித்து செங்கோட்டையன் பதில்

தனுஷ் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய நடிகர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்கள், அந்த வரிசையில் நடிகர் தனுஷ் அரசியல் ஆலோசனையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறதே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குச்  பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை என்பது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், இறுதி முடிவு என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது, அது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு” என்று  குறிப்பிட்டார். 

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்துப் பேசுகையில், முந்தைய காலத்தில் முடிக்கப்பட்ட பணிகள் வெறும் 70 சதவீதம் மட்டும்தான் என்றும், ஒரு வீட்டில் கூரை போடாமல் விட்டால் எப்படி மழை நீர் ஒழுகுமோ, அதுபோலத்தான் கால்வாய்களை இணைக்கும் பல்வேறு முக்கியப் பகுதிகள் விடுபட்டிருந்தன என்றும் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சரின் நேரடித் துறையாக இது இருக்கும் காரணத்தால், விடுபட்ட வடிகால் இணைப்புகள் மிக வேகமாக, விரைவாக நிறைவேற்றிக் காட்டப்பட்டுள்ளது என்றார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘பொதுவாக இன்றைய நிகழ்வு என்பது நீங்கள் எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டியது இயற்கை பேரிடர்; மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள். அதே நேரத்தில் இயற்கை பேரிடர் வருகின்ற பொழுது எப்படி காக்கலாம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். சாதாரண இடத்திற்கு எடுத்துச் செல்லாதீர்கள்’ என்றார்.

முன்னதாக தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்வியைச் செய்தியாளர்கள் எழுப்பியபோது அருகில் இருந்த அமைச்சர் பர்வேஸ் ‘சார் போதும்’ என்ற படி ‘போதும் கிளம்பலாம்’ என செங்கோட்டையனிடம் தெரிவித்தது அங்கு சற்று பரபரப்பு ஏற்படுத்தியது.