வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது குறித்து அதிருப்தி வெளிப்படுதும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது மதிப்புமிக்க மற்றொரு விருதான புலிட்சர் (Pulitzer Prize) மீது தனது பார்வையை திருப்பியுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் அவர், நோபல் அமைதி பரிசு தனக்கு வழங்கப்படாதது குறித்து மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை; புலிட்சர் விருதும் கிடைக்கவில்லை. எனது எழுத்துக்காக புலிட்சர் விருது கிடைத்திருக்க வேண்டும்” என்றார்.
ரஷ்யா தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி வெளியிட்டு இந்த ஆண்டு புலிட்சர் விருது பெற்ற பத்திரிகையாளர்களை விமர்சித்த அவர், ‘அந்த செய்திகளில் உண்மையில்லை’ என்றும், தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
புலிட்சர் விருது என்பது இதழியல், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதாகும். கொலம்பியா பல்கலை விருதுக்கான தேர்வை நிர்வகித்து வருகிறது.
டிரம்ப் தனது பெயரில் வர்த்தகம், அரசியல் மற்றும் வியூகங்கள் தொடர்பாகச் சுமார் 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். முதல் புத்தகமான தி ஆர்ட் ஆப் தி டீல் 1987ல் வெளியானது. இவரின் பல புத்தகங்கள் பிற எழுத்தாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
