அம்மான்; ஜோர்டானில் சர்ச் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கர்க் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந் நிகழ்வில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
காரில் இருந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் சர்ச்சுக்குள் புகுந்து அவர்கள், அங்கிருப்பவர்களை பார்த்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் அவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தினர்.
இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார், உடனடியாக சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார், என்பது பற்றிய எந்த தகவல்களும் தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக காணப்படும் ஜோர்டானில், கர்க் மாகாணத்தில் குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
