பெங்களூரு: பெங்களூரு எலஹங்காவில் உள்ள சொகுசு பங்களாவில் திருமணம் நடத்தும் விஷயத்தில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது தங்கைக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்.,கைச் சேர்ந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி, அம்மாநில முதல்வராக இருந்தவர். கர்நாடக மாநிலம், பெங்களூரின் எலஹங்காவில் ராஜசேகர ரெட்டிக்கு, 20 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சொகுசு பங்களா கட்டினார்.
இந்த பங்களாவுக்கு, ‘எலஹங்கா பேலஸ்’ என, பெயர் சூட்டினார். இவரது குடும்பத்தின் பல திருமணங்கள் இங்கு நடந்தன. ராஜசேகர் ரெட்டி இறப்பதற்கு முன், தன் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், மகள் ஷர்மிளாவுக்கும் இந்த இடத்தை சமமாக பிரித்து கொடுத்திருந்தார். அங்கு இருவரும் தனித்தனியாக பங்களாக்கள் கட்டியுள்ளனர்.
எலஹங்கா பேலசில் இருவரின் வீடுகளும் ஒரே காம்பவுண்டில் உள்ளன. இங்கு எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும், ஒருவருக்கு ஒருவர் அனுமதி பெறுவது அவசியம். தற்போது, ஜெகன் மோகனுக்கும், ஷர்மிளாவுக்கும் இடையில் சொத்து தகராறு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஷர்மிளாவின் மகள் அஞ்சலிக்கு, வரும், நவ., 25ல் திருமணம் நடக்கவுள்ளது. இதை எலஹங்கா பேலசில் நடத்த தீர்மானித்தார். இதற்காக, தன் அண்ணனும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியிடம் அனுமதி கேட்டார். ஆனால், பாதுகாப்பு காரணங்களை கூறி, அந்த வீட்டில் திருமணம் நடத்த, ஜெகன்மோகன் அனுமதி மறுத்துள்ளார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தோற்ற பின் ஜெகன் மோகன் ரெட்டி, பெரும்பாலும் எலஹங்காவில் உள்ள பங்களாவில் தான் வசிக்கிறார். இங்கு திருமணம் நடத்தினால், போட்டோகிராபர்கள், வீடியோ எடுப்பவர்கள், சமையல் ஊழியர்கள் உட்பட பலர் வருவர்.
தன் வீட்டின் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியே தெரியும். இது தனக்கும், குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஜெகன் மோகன் ரெட்டி கருதுகிறார்.
இதை பொருட்படுத்தாத ஷர்மிளா, எலஹங்கா பேலசிலேயே திருமணத்தை நடத்த தயாராகி வருகிறார். மகளின் திருமண அழைப்பிதழிலும் இதே முகவரியை அச்சிட்டு, உறவினர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரச்னை என்றால் தன் மகளின் திருமண நாளன்று, வேறு இடத்துக்கு சென்று விடும்படி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
