நீதிமன்றத்திற்கு செல்லும் போது ராகுல் காந்தியின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கு தொடர்பான விசாரணை 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (26-10-26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்காக ஆஜராவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தை நோக்கி நோக்கிச் சென்றார். காவல்துறையினரின் துணையுடன் பூர்வாஞ்சாலை விரைவுச்சாலையில் ராகுல் காந்தி காரில் சென்ற போது, அவரது கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியது.
வாகன அணிவகுப்பில் இருந்த சில வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்குச் சொந்தமான ஒரு தனியார் வாகனம், திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்றும் இது பெரிய விபத்து அல்ல என்றும் ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
