நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு அவசர சிகிச்சையா… நடந்தது என்ன?

நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் செய்தியால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாக, நடிகர் ஈ.சுகுமார் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மொட்டை ராஜேந்திரனைச் சந்தித்தபோது நடந்த உரையாடல்களையும், அவரது திரையுலகப் பயணத்தின் சுவாரசியமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான உடலமைப்பு, வித்தியாசமான தோற்றம், நகைச்சுவை கலந்த நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டியதோடு, பின்னர் நகைச்சுவை நடிகராகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இந்நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் அவரைப் பற்றிய கவலையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈ.சுகுமார் பகிர்ந்துள்ள பதிவின்படி, நடிகைகள் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் ஒருவர் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, மொட்டை ராஜேந்திரன் தொடர்பான இந்தச் செய்தியும் பரவியுள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பலரும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தச் செய்தியை வெளியிட்ட நபரிடமே அவர் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மொட்டை ராஜேந்திரனைச் சந்தித்த ஈ.சுகுமார், வழக்கம்போல உற்சாகமாக இருக்கும் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். அதற்குப் பதிலளித்த மொட்டை ராஜேந்திரன், தான் நலமாக இருப்பதாகவும், தேவையற்ற செய்தியால் பலரும் மாறி மாறித் தொலைபேசியில் அழைத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டபோது, தனக்கு ஒரு இணைப்பு வந்ததால் செய்தியை வெளியிட்டதாக அவர் கூறியதாகவும், மறுப்பு வீடியோ வெளியிடுவதாகச் சொல்லியும் இதுவரை வெளியிடவில்லை என்றும் மொட்டை ராஜேந்திரன் வருத்தப்பட்டதாகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரைச் சமாதானப்படுத்திய ஈ.சுகுமார், “விடுங்க தலைவா, திருஷ்டி கழிஞ்சது. இன்னும் நூறு வருஷம் ஆயுசு கெட்டியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட மொட்டை ராஜேந்திரன் தனது வழக்கமான சிரிப்பை வெளிப்படுத்த, அங்கிருந்தவர்களும் உற்சாகமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

70 வயதிலும் இளமைத் துடிப்புடன் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், தினமும் காலை ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. அவரது தந்தை தூத்துக்குடி அருணாச்சலம், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் காலத்தில் பிரபலமான சண்டைப் பயிற்சிக் கலைஞராக இருந்தவர். அவர்களுக்குப் பல படங்களில் டூப் போட்டவர். பின்னர் அவரது மூன்று சகோதரர்களும் அதே துறையில் பணியாற்றிய நிலையில், தானும் சண்டைக் கலைஞராகத் திரையுலகில் இணைந்ததாக மொட்டை ராஜேந்திரன் நினைவுகூர்ந்துள்ளார்.

1977ஆம் ஆண்டு சண்டைக் கலைஞராகப் பணியைத் தொடங்கிய அவர், சுமார் 35 ஆண்டுகள் பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் படப்பிடிப்பின்போது கழிவுநீர் கலந்த கடல் பகுதியில் குதிக்கும் ஆபத்தான காட்சியில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்களே அந்தச் செயல் ஆபத்தானது என்று எச்சரித்தபோதும், சண்டைக் கலைஞராகத் தனது பணியைச் செய்ததாகக் கூறியுள்ளார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தனது தலைமுடி கொட்டத் தொடங்கியதாகவும் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

பின்னர் நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டிய அவர், தொடர்ந்து நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளதாகவும், தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு தற்போது நிம்மதியாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். சந்திப்பின் இறுதியில், அடுத்த நாள் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதாகக் கூறியபடி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளார்.

Source link