கல்யாண வீட்டில் சீரியல் தோரணம் அகற்றிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை – கவிதா தம்பதியரின் மகன் ரூபன் (வயது 13). கவிதா தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசிக்கிறார். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய ரூபன் சில வருடங்களாகத் தனது பகுதியில் மைக் செட் வாடகைக்கு விடும் பாண்டியன் என்பருடன் நிகழ்ச்சிகளுக்கு மைக் செட், சீரியல் பல்ப் தோரணங்கள் கட்ட சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், வடகாடு கிராமத்தில் நேற்று (25.10.2026) நடந்த ஒரு திருமண வீட்டில் மைக் செட், சீரியல் பல்ப் தோரணங்கள் கட்டியுள்ளனர். இன்று (26.10.2026) அதனை எடுத்து வர சென்று வீட்டின் மேல் கைபிடி சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் பல்புகளை எடுக்க ரூபன் மாடிக்கு சென்று நீண்ட நேரமாகக் கீழே வராததால் கீழே நின்றவர்கள் மேலே ஏறிச் சென்று பார்த்த போது மின் ஒயர்களில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் ரூபன் மாடி தடுப்புச் சுவரில் தொங்கியுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே மின்சாரத்தை நிறுத்தி ரூபன் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து வடகாடு போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனுக்கு நேர்ந்த சோகத்தைப் பார்த்து உறவினர்கள் கதறுகின்றனர்.