புதுடில்லி:எஸ்.ஐ.ஆர்., பணி தொடர்பாக மற்ற இரு தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதல் பெறாமல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 10 மாதங்களில் தேர்தல் கமிஷன் எடுத்த முடிவுகள் மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பான உத்தரவுகள் குறித்து, மற்ற தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இருவரும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக, நாளிதழில் வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், பீஹாரின் பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி சார்பில், ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், வழக்கு முடியும் வரை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் தே ர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டதாவது :எஸ்ஐஆர் நடவடிக்கை தொடர்பாக 2025 ஜூன், அக்டோபர், மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை.தேர்தல் கமிஷனின் குறிப்பிட்ட பிரிவு அனுப்பும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் கமிஷனருக்கும், பிறகு மற்றொரு தேர்தல் கமிஷனருக்கும் இறுதியாக தலைமை தேர்தல் கமிஷனருக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள், தேர்தல் கமிஷனின் சம்பந்தப்பட்ட கோப்புகளில் முறையாக பதிவு செய்து, தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனரின் கையெழுத்தை கொண்டு இருக்கும். அதன் பிறகு அந்த முடிவு தேர்தல் கமிஷன் செயலகத்தால் அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும்.
முடிவெடுக்கும் செயல்முறையில், தலைமை தேர்தல் கமிஷனர் , மற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும், அல்லது தேர்தல் கமிஷனர்கள், தலைமை தேர்தல் கமிஷனுருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் பரிந்துரை, கருத்து ஆகியவை 2023ம் ஆண்டு சட்டத்தின்படி தேர்தல் கமிஷனின் முடிவாக கருதப்படாது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டவை. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். பார்ம் 6 குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த தேர்தல் கமிஷன், அந்த படிவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
