”தனக்குத்தானே இறுதிச் சடங்கு”; ஏ.ஐ மூலமாக நீதிமன்றத்தையே ஏமாற்றிய பலே கில்லாடி

வழக்கிலிருந்து தப்பிக்கச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் தனக்குத்தானே இறுதிச் சடங்கு நடத்தி மரண நாடகம் ஆடிய நபர் காவல்துறையிடம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், மவு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் சிங். இவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்ஷிபுரா ரயில்வே தண்டவாளம் அருகே மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பான வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த குற்றவாளி ராஜ்குமார் ராஜ்பர் (38) மற்றும் அவரது நண்பர் சுதர்சன் ராஜ்பர் ஆகியோரை காவல்துறையினர் செய்து கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் ராஜ்பர், நீதிமன்ற விசாரணையிலிருந்து நிரந்தரமாகத் தப்ப திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 2025ம் ஆண்டு காசிப்பூரில் உள்ள சுடுகாட்டில் இறந்த ஆடு ஒன்றின் உடலை வைத்து சிதையில் வைத்து தீ மூட்டினார்.  இதனை வீடியோ எடுத்துக்கொண்டார். 

பின்னர், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த ஆட்டின் உடலின் மீது தனது முகத்தை அச்சு அசலாக ஒட்டவைத்து, தான் இறந்து சிதையில் எரிவது போலத் தத்ரூபமாகப் புகைப்படங்களை உருவாக்கினார். அத்துடன் தனது இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்குகள் நடந்தது போன்ற போலி ஆவணங்களையும் மவு நகராட்சியில் சமர்ப்பித்து இறப்புச் சான்றிதழையும் பெற்றார்.  

இந்த போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தான் இறந்துவிட்டதாக நீதிமன்றத்தையே அவர் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு விசாரணை இல்லாமல் சுதந்திரமாக இருந்து வந்தார். இந்நிலையில், இவரது இந்த சதி நாடகம் குறித்து காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், காவல்துறையினர் கவாஜாஜஹான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜ்குமார் ராஜ்பரை சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.