கேப்டவுனில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபாரமாகத் தொடங்கி 158/0 என்ற நிலையிலிருந்து மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சுக்கு 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டாஸ் வென்ற பாட் கமின்ஸ் முதலில் பேட் செய்ய வேண்டிய பிட்சில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததும், கடந்த போட்டியின் சிறந்த ஆஸ்திரேலிய வீரரான ஸ்காட் போலண்டை நீக்கியதும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
ஆனால், சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா பிற்பாடு தொடர் நெருக்கடி கொடுத்து ஒரு கட்டத்தில் 35 ரன்களுக்கு 5 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை சரிக்க, மிட்செல் ஸ்டார்க் சடுதியில் இன்னிங்சை முடித்து வைத்தார்.
மிட்செல் ஸ்டார்க் 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்து தன் டெஸ்ட் வாழ்க்கையில் 20-வது முறையாக இன்னிங்ஸில் 5+ விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்காவை, மிட்செல் ஸ்டார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நிலைகுலையச் செய்தது.
இரண்டாவது செஷனில் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 192 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. மார்கஸ் அக்கர்மன் 94 பந்துகளில் 95 ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 78 ரன்களுடனும் சிறப்பாக விளையாடினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மார்க்ரம் – அக்கர்மன் ஜோடி 140 ரன்கள் சேர்த்தது.
ஆனால், அக்கர்மன் தனது முதல் டெஸ்ட் சதத்தை நெருங்கிய நிலையில், நாதன் லயன் பந்தை இறங்கி வந்து தூக்க நினைத்தார், ஆனால் லயன் மிகவும் சாமர்த்தியமாக வைடாக வீச ஆக்கர்மேன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 95 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசினார்.
மார்க்ரம் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஸ்கொயர் லெக்கில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
பின்னர் கேப்டன் தெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் லயன் வீசிய அபாரமான பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். ஆஸ்திரேல்யா நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். கமின்ஸும்தான் ஏனெனில் கடந்த டெஸ்ட்டின் வெற்றி இன்னிங்சை ஆடி 179 ரன்களை எடுத்து வெற்றி நாயகனானவர் தெம்பா பவுமா.
இந்நிலையில், போலண்டை நீக்கி விட்டு உள்ளே வந்த லயன் இவர் விக்கெட்டை வீழ்த்தியது கமின்ஸுக்குமே பெரிய ஆறுதலானது. கூப்பர் கானோலியும் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி மேத்யூ பிரெட்ஸ்கியை 2 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஸ்டார்க் மீண்டும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். டேவிட் பெடிங்காம் 50 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த இரண்டு பந்துகளிலேயே வியான் முல்டர் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்கா வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் பின்னர் மார்கோ யான்சன் 52 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 42 ரன்களும் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். ஜான்சன் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
ஆனால், இரண்டாவது புதிய பந்தில் மீண்டும் ஸ்டார்க் மிரட்டினார். 81-வது ஓவரில் ரிக்கெல்டனை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றிய அவர், இரண்டு பந்துகளுக்குப் பிறகு யான்சனை போல்டாக்கினார்.
அடுத்த சில பந்துகளிலேயே ஜெரால்ட் கோட்ஸியை கோல்டன் டக் முறையில் போல்டாக்கிய ஸ்டார்க், ககிசோ ரபாடாவையும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார்.
இதனால் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா, மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஸ்டார்க் 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
முதல் டெஸ்டில் டர்பனில் ஆஸ்திரேலியா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் கெபெர்ஹாவில் தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா முன்னிலை பெற ஒரு வாய்ப்புக் கூடியுள்ளது.
