தடகள போட்டி தொடக்க விழாவில் சொதப்பல் அமைச்சர் தாமதத்தால் மாணவர்கள் கடும் அவதி

சேலம்: விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வர தாமதமானதால், வெயிலில் அமர்ந்து மாணவர்கள் சிரமப்பட்டனர். நடன நிகழ்ச்சியும் வெயிலில் நடத்தப்பட்டதால் அவதிப்பட்டனர்.

கரூப்பூரில் போட்டி நடக்கும் நிலையில், தொடக்க விழாவை காந்தி மைதானத்தில் நடத்தியதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ -– மாணவியர் சிரமப்பட்டனர். போதாக்குறைக்கு அமைச்சர் கொடி ஏற்றும்போது, கயிறு அறுந்து தலைகீழாக ஏற்றப்பட்டது, மேலும் வேதனையை தந்தது.

தமிழகத்தில், 67வது குடியரசு தின விளையாட்டு போட்டி, குறுவள மையம், வட்டாரம், மாவட்ட அளவில் நடந்தது. அதில் மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில தடகள போட்டி தொடக்க விழா, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.

காலை, 10:00 மணிக்கு, தொடக்க விழா நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள், 7:00 மணிக்கு, காந்தி மைதானம் அழைத்து வரப்பட்டனர். ஆனால், 11:00 மணி வரை அமைச்சர் வரவில்லை. இதனால், வெயிலில் காத்திருந்த மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். சிலர், கொடி, ஆடைகளை கொண்டு தலையை மூடியபடி அமர்ந்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் சோர்வடைந்த மாணவர்கள், மைதானத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆங்காங்கே போய் படுத்துக்கொண்டனர். ஒருவழியாக, 11:05 மணிக்கு, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வந்ததும், நிகழ்ச்சி தொடங்கியது.

அமைச்சர், தேசியக்கொடி ஏற்றினார். கயிறு அறுந்ததால், கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதை பார்த்து சுதாரித்த அமைச்சர், கொடியை இறக்கி சரிசெய்து மீண்டும் ஏற்றினார்.

மேலும் மாணவ -– மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்த நிலையில், அவர்களும் வெயிலில் நடனமாடி சிரமப்பட்டனர். தொடக்க விழாவை தொடர்ந்து, அனைத்து போட்டிகளும் கருப்பூர் பெரியார் பல்கலை மைதானத்தில் நடக்கிறது.

பல்கலை மைதானத்தில் போட்டி நடக்கும் நிலையில், தொடக்க விழாவை காந்தி மைதானத்தில் நடத்தினர். இதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனையரான மாணவ – மாணவியர், 38 மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்.

அவர்கள், காந்தி மைதானம் வந்து, தொடக்க விழாவில் பங்கேற்ற பின், மீண்டும் கரூப்பூர் சென்றனர். இதனால், பயண அலைச்சலால் சோர்வடைந்தனர். போட்டி நடக்கும் இடத்தில் தொடக்க விழாவை நடத்தியிருந்தால், மாணவ – மாணவியர் அலைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இதையடுத்து கருப்பூரில் இருபாலருக்குமான ஓட்டப்போட்டி, குண்டு, வட்டு எறிதல் மற்றும் நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களான, சேலம் மேற்கு லட்சுமணன், வீரபாண்டி பழனிவேல் மற்றும் மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம், காங்., கட்சி துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

‘புது செயலி’

முன்னதாக, அமைச்சர் பார்த்திபன் அளித்த பேட்டியில், ‘‘ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, அனைத்து பஸ்களையும் இணைத்து முன்பதிவு செய்யும்படி, தமிழக அரசு சார்பில் புது செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
அரசு உத்தரவை மீறி, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதோடு, பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்,’’ என்றார்.

Source link