“ஆரம்பகாலத்தில் இருந்து நீண்ட நெடும் பயணம்…” – இளையராஜா இரங்கல்

கிதார் இசைக்கலைஞர் சதா என்கிற சதானந்தம்(79) வயது மூப்பு காரணமாகக் காலமானார். இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சுதர்சனமின் மகன் ஆவார். சிறுவயதில் இருந்தே கிதார் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் அதில் முறையாக பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல கிதார் கலைஞராக வலம் வந்தார். குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் முதன்மை கிதார் கலைஞராக  40 ஆண்டுகள் பயணித்துள்ளார். 

‘என் இனிய பொன் நிலாவே’, ‘பூவே செம்பூவே, ‘நினைவோ ஒரு பறவை’ மௌன ராகம் பின்னணி இசை என எண்ணற்ற ஹிட் பாடல்களில் இவரது இசை முக்கிய பங்காக இருந்துள்ளது. கிதாரை தவிர்த்து கீபோர்டு, வைப்ராபோன் போன்ற பிற இசைக்கருவிகளையும் வாசிப்பதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். இவரது மறைவு இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் இசைக்கலைஞர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை வீடியோ வாயிலாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “ஆரம்பகாலத்தில் இருந்து நீண்ட நெடும் காலமாக என்னுடன் பணிபுரிந்த இசையமைப்பாளர் சுதர்சனமின் புதல்வன் சதானந்தம், இன்று காலமாகிவிட்டார் என்பதை அறிந்து மிகவும் துக்கம் அடைந்தேன். பொதுவாக காலமானவர்களை நான் இறந்த நிலையில் பார்ப்பது கிடையாது. அதை விரும்புவதும் இல்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் என் உயிருடன் வாழ்ந்தவர்கள். உணர்வுடன் கலந்தவர்கள். அதனால் சதானந்தத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றுள்ளார்.