ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; ராஜ்நாத்

புதுடில்லி: பிரதமரை வித்தைக்காரர் என விமர்சித்த காங்கிரஸ் எம்பி ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல், பிரதமர் மோடியை வித்தைக்காரர் என குறிப்பிட்டு விமர்சித்தார். இதற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது : பிரதமர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்திய வார்த்தை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு எந்தளவுக்கு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. நாட்டு மக்கள் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி உள்ளனர். பாஜவுக்கு போதிய பலம் உள்ளது. இதனால், அவர் பிரதமர் ஆகி உள்ளார். தொடர்ந்து வித்தைக்காரர் எனக்கூறுவது நாட்டு மக்களை விமர்சிப்பதற்கு சமம்.

ராகுல் பயன்படுத்திய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: தவறாக வழிநடத்தும் அறிக்கையை ராகுல் கொடுத்துள்ளார். அதற்கு நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். ஓபிசிக்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு பார்லிமென்டில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ராகுல் சொல்கிறார். இது அனுமதிக்க முடியாதது. நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பின்படி ஓபிசி பிரிவினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கவில்லை.

இதற்கு காங்கிரசிடம் பதில் அளிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜிவ், ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ராஜிவ் பிரதமர் ஆக இருந்த போதும், அந்த பதவியில் இல்லாத போதும், ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தார். ராஜிவ் ஏன் ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதற்கு ராகுல் விளக்கம் அளிக்க முடியுமா? கிரண் ரிஜிஜூ கூறினார்.

Source link