புதுடில்லி:தன் தந்தை மீது போக்சோ வழக்கு தொடர்ந்தார் பெண். அந்த பெண்ணின் மகள் அளித்த வாக்குமூலத்தில், தன் மீது எந்த அத்துமீறலும் நடக்கவில்லை என கூறியதை அடுத்து, அந்த நபர் மீதான பொய் போக்சோ வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
தென் கிழக்கு டில்லியின் கோவிந்த்புரி என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், தன் மகளிடம், பாலியல் ரீதியாக, தன் தந்தை அத்துமீறியதாக புகார் கொடுத்தார். அதையடுத்து, கோவிந்த்புரி போலீசார், அந்த நபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அதன் ஒரு கட்டமாக, பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி, தவறாக தன் தாய் புகார் கொடுத்ததையும், தன் தாத்தாவுக்கும், அவரின் மகளுக்கும் இடையே நிலவும் நிலம் தொடர்பான விரோதம் காரணமாக, பொய்யான புகார் கொடுத்ததாக கூறினார்.
அதையும் நம்பாத போலீசார், அந்த பெண்ணை, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அங்கும், அவருக்கு, எவ்வித பாலியல் அத்துமீறலும் நடக்கவில்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்து கூறினர்.
அதையடுத்து, அந்த நபர் மீது தொடர்ந்த போக்சோ வழக்குகளை வாபஸ் பெற்ற போலீசார், போலியாக தன் தந்தை மீது புகார் அளித்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
