அதிமுக சார்பில் ரூ.10 ஆயிரம் திட்டத்திற்கான கூப்பன் வினியோகம்: திமுகவினர் விரட்டியடிப்பு

மதுரை : மதுரையில் அதிமுக சார்பில் ரூ.10 ஆயிரம், ரூ.2 ஆயிரம் திட்டங்களுக்கான கூப்பன் (மாதிரி காசோலை) மக்களுக்கு வினியோகித்தபோது திமுகவினர் தடுத்து விரட்டினர்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, திமுக சார்பில் பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் நோதாஜி ரோட்டில் காலை அ.தி.மு.க.,வை சேர்ந்த பாண்டி, அடையாளம் தெரியாத 4 பேருடன் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அதிமுக சின்னம் இடம் பெற்ற கூப்பன்களை வினியோகம் செய்தனர்.

அந்த கூப்பன், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற ‘ஒவ்வொரு குடும்பத்திற்கும் புரட்சித் தலைவி அம்மா அன்புத் தொகை ரூ.10 ஆயிரம்’, ‘குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை’ வாக்குறுதிகள் இடம் பெற்ற காசோலை வடிவில் இருந்தது.

தகவல் அறிந்து மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கூப்பனை பெற அதிமுகவினரை சுற்றினர். இது அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் அவர்களிடம் விசாரித்து அவர்களை விரட்டியடித்தனர்.

இதையடுத்து அதிமுக பிரமுகர்கள் சிலர் அப்பகுதிக்கு வந்து திமுக வட்டச் செயலாளர் கண்ணனை மிரட்டி தாக்க முயன்றனர். அங்கிருந்து தப்பி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதில், ‘அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் எஸ்.எம்.டி.,ரவி, போஸ் உள்ளிட்டோர் தன்னை தாக்க வந்ததாகவும், தேர்தல் நன்னடத்தை விதிமீறி மக்களுக்கு காசோலை வடிவிலான கூப்பன் வழங்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Source link