டெஹ்ரான்: இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வணிக கப்பல்களும் செல்லலாம் என்ற முக்கிய அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ளார்.
தட்டுப்பாடு மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவக்கின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. பதிலுக்கு இஸ்ரேல், லெபனான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தியது.
போர் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுடன், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 40 நாட்களாக தொடர்ந்த போரை கைவிடும்படி அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
அதன் பின், பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சு நடந்தது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் பேச்சில் இடம் பெற்றன. 21 மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
10 நாட்கள் ஈரான் உடனான அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக உள்ள லெபனான் – இஸ்ரேல் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் அமெரிக்காவில் சந்தித்து பேச்சு நடத்தின. அதன் முடிவில், லெபனான் – இஸ்ரேல் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
லெபனான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அனைத்து வணிக கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று அறிவித்தார்.
இந்த அனுமதி அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச கப்பல்கள் அனைத்தும், ஈரான் கடல்சார் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த பாதையிலேயே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
