சென்னை: சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, வரும் 28ம் தேதி வரை அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக, கடந்த பிப்ரவரியில், கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், அவரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடையுமாறு கெடு விதித்து உத்தரவிட்டது. இந்த கெடு, மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், சரண் அடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘கரூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ததாலும், மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை காரணமாகவும், விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய இயலவில்லை. எனவே, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, முன்ஜாமின் உத்தரவின்படி, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை, வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், வரும் 29, 30 மற்றும் மே 1ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, நிபந்தனை விதித்தார்.
