புதுடெல்லி: “நேற்றைய தினம் என்டிஏவுக்கு ஒரு கருப்பு தினம். ஏனெனில் அவர்கள் முதன்முறையாக ஒரு அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர். அந்த அதிர்ச்சிக்கு அவர்கள் தகுதியானவர்களே,” என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “மகளிர் இட ஒதுக்கீட்டை நீங்கள் உறுதியாக அமல்படுத்த விரும்பினால், 2023-ம் ஆண்டில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவைத் திரும்பக் கொண்டு வாருங்கள். அதை இப்போதே அமல்படுத்துவதற்கு ஏற்ப அதில் சில சிறிய திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தால் அதைச் செய்து இப்போதே நடைமுறைப்படுத்துங்கள். பெண்களுக்கு உரிய உரிமைகளை இந்த தருணத்திலேயே அளியுங்கள். 2029-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்.
நேற்றைய தினம் அவர்களுக்கு ஒரு கறுப்பு தினம். ஏனெனில் அவர்கள் முதன்முறையாக ஒரு அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர். அந்த அதிர்ச்சிக்கு அவர்கள் தகுதியானவர்களே. இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பிரச்சினைகள் பன்மடங்காக பெருகியுள்ளன. பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மக்கள் தொடர்பு மூலமும் ஊடகங்கள் மூலமும் செய்யப்படும் ஆரவாரங்கள் இனி எடுபடாது.
