சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக பார்லியில் ஓட்டுப்போட்ட திமுகவுக்கு எதிரான ஹேஷ்டேக்கை, சமூகவலைதளத்தில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவை பார்லியில் தாக்கல் செய்ய பாஜ திட்டமிட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் ஓட்டளித்தனர்.
இதனால், மசோதா தோல்வியடைந்தது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிராக ஓட்டளித்தனர். இதனை பாஜ உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் பார்லிமென்டுக்கு செல்வதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் விமர்சித்து வந்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படிபட்ட சூழலில், பெண்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டதாக குற்றம்சாட்டிய பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், திமுகவுக்கு எதிரக #DMKBackstabsWomen என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேவேளையில், தமிழகத்துடன் துணைநிற்பதாக #NDAWithTamilNadu என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.
