புதுடில்லி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அரசு முறை பயணமாக நாளை இலங்கை செல்லவுள்ள நிலையில், அந்நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இருநாள் அரசு முறை பயணமாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை இலங்கைக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயக, பிரதமர் ஹரிணி அமரசூர்யா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார். அப்போது, இருநாடுகளிடையேயான எரிசக்தி, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் இந்தப் பயணத்தையொட்டி, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
