வண்டவாளங்களை 'டிவி'யில் போட்டு விடுவேன்: செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்

கோபி: ”கோபியில் நீ நடமாட முடியாது. அத்தனை பேரும் உன் மீது காறி துப்பி விடுவர்,” என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, மரியாதை குறைவாகவும், ஏக வசனத்திலும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி காட்டமாக பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் த.வெ.க.,வில் இணைந்து, ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அந்த தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த பழனிசாமி பேசியதாவது:

செங்கோட்டையனை போல, திமிர் பிடித்த ஆள் யாரும் இல்லை. அவரைப் பற்றி பேசியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

அவர் ஒரு சுயநலவாதி; திமிர் மற்றும் அகங்காரம் பிடித்தவர். அதனால், அவரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இத்தொகுதியில் செங்கோட்டையன் இருக்கும் வரை, யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? அவரின் ஆதரவாளரான சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி ஆகியோரை பொட்டி கட்டி அனுப்பி வைத்தார். அவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடியவர் செங்கோட்டையன்.

அவரது மனைவியும், மகனும், தலைமை செயலகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, செங்கோட்டையன் குறித்து புகார் அளித்தனர்.

அது ஒரு கேவலமான புகார். அது என்ன என்பதை அனைவரும் அறிவர். அதையடுத்து, செங் கோட்டையனின் பதவியை ஜெயலலிதா பறித்தார். அவர் ஒரு மோசமான மனிதர் என்றும் ஜெயலலிதா கூறினார்.

அப்படிப்பட்டவரை நான் முதல்வராக இருந்தபோது, என் அமைச்சரவையில் சேர்த்ததுதான் தப்பு. என் அமைச்சரவையில் சேர, கெஞ்சி, கண்ணீர் விட்டான் அந்த மனுஷன். தற்போது, வாய்க்கொழுப்பில் அந்த மனுஷன் பேசுறான். நீ அழுதது மற்றும் கண்ணீர் வடித்தது எனக்கு தெரியாதா?

செங்கோட்டையன் எவ்வளவு மோசமான, கொடுமையான ஆள் என, பச்சையாக என்னால் பேசமுடியும். ஆனால், பதவி இருப்பதால் அடக்கி வாசிக்கிறேன்.

ஸ்டாலின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவன் நான். கட்சியை உடைக்க துணை போனவர் செங்கோட்டையன். எனக்கு பல கோடி ரூபாயில் மில் இருப்பதாக அவர் பேசியுள்ளார். அது என் சம்பந்தியின் தொழிற்சாலை.

ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையன் கோபியில் பங்களா கட்டியது எப்படி? உனக்கு 30 ஏக்கரில் எப்படி கதிர் கல்லுாரி வந்தது? செங்கோட்டையனுக்கு நாவடக்கம் தேவை.

தனிப்பட்ட முறையில் என்னை பற்றி பேசினால், அவரின் வண்டவாளங்களை ‘டிவி’யில் போட்டு விடுவேன். கோபியில் அவர் நடமாட முடியாது. அத்தனை பேரும் அவரை காறி துப்பி விடுவர். இனியாவது அவர் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link