சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புது தலைமை பயிற்சியாளர் சுலபமாக கிடைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி நடக்கவில்லை. சிஎஸ்கே தேர்வு செய்து வைத்த தலைமை பயிற்சியாளர்கள் யாரும், சிஎஸ்கேவுக்கு வர முன்வரவில்லை.
முதலில் ராகுல் டிராவிட்டிம் இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் பேசியது. ஆனால், மகேந்திரசிங் தோனி உட்பட, யாருடைய தலையீடும் இருக்க கூடாது என கண்டிஷன் போட்டதால், டிராவிட்டை நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தை தலைமை பயிற்சியாளராக கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்த நிலையில், அதுவும் நடக்கவில்லை.
இப்படி, சிஎஸ்கேவுக்கு தொடர்ந்து தோல்விகள் மட்டும் கிடைத்து வந்த நிலையில், இறுதியாக இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை தேர்வு செய்தனர். ஆனால், அவர் 20 கோடி கேட்டதால், அப்படியே சிஎஸ்கே நிர்வாகம் பின்வாங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது.
இறுதியில், டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் கேமங் பதானியை தேர்வு செய்தனர். ஆனால், அவரும் தற்போது ஒப்புகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கே தலைமை பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் எனக் கூறிவிட்டாராம். இதனால், மீண்டும் இயான் மோர்கனிடமே பேச்சு வார்த்தை நடத்த சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இயான் மோர்கனிடம் பேசி, 10 கோடிக்கு சம்மதிக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் பயிற்சியாளர்கள் வரலாற்றில், இதுவரை எந்த பயிற்சியாளரும் 10 கோடியை வாங்கியது கிடையாது. அதிகபட்சமாக, பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் 9.5 கோடி வாங்குகிறார். இதனால், இயான் மோர்கன் 10 கோடிக்கு ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இயான் மோர்கன் தேர்வு ஏன்? இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்த இயான் மோர்கன், கடும் பின்னடைவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்து, அதிக வெற்றிகளை பெற்றுதர வைத்தார். குறிப்பாக, கேப்டனாக அவரது வெற்றி சதவீதம் 60-க்கும் அதிகமாக இருப்பதால்தான், இயான் மோர்கனை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் பேச்சு வார்த்தை: இயான் மோர்கன், தலைமை பயிற்சியாளராக வந்த உடன், மீண்டும் ஹர்திக் பாண்டியா டிரேடிங் பேச்சு வார்த்தையை துவங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் கேப்டன்ஸி சண்டை நடைபெற்று வருவதால், ஐபிஎல் 2027 சீசனுக்கு புதுக் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்யலாமா என்பது குறித்தும், புது பயிற்சியாளர் வந்த உடன் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக ஆலோசிக்க உள்ளது.
கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், கடந்த சீசனில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வெறும் 123 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடினார். இதனால், டாப் ஆர்டரை ஆக்ரோஷமான பேட்டர்களை வைத்து கட்டமைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஏலத்தில் ஹேரி ப்ரூக்கை வாங்கி, ஓபனராக ஆட வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.
