விநாயகர் சதுர்த்தி வழிபாடு :
விநாயகரின் அருளை பெறுவதற்காகவும், வாழ்க்கையில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான நாளாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து, வீட்டில் வைத்து வழிபட்டு, பிறகு அதை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. விநாயகர், வினைகளை தீர்க்கும் கடவுள் என்பதால் நம்முடைய கர்மவினைகள் கரைய வேண்டும் என்பதற்காக களி மண் விநாயகர் உருவத்தை வாங்கி வழிபட்டு, பிறகு அதை தண்ணீரில் எடுத்துச் சென்று கரைக்கிறோம்.
விநாயகர் சிலை :
விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலையை வாங்கும் பொழுது எப்படி வாங்குவது என்று தெரியாமல் சில தவறான சிலையை வாங்குகிறோம். கடையில் பார்க்கின்ற எல்லா சிலைகளையும் வாங்கக்கூடாது. விநாயகர் சிலை வாங்குவதற்கு என்று ஒரு முறை உள்ளது. அதனால் விநாயகர் சிலை வாங்கும் போது சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். விநாயகர் உருவம் என்பதற்காக தவறான சிலையை வாங்கி வந்து வழிபட்டால், அதற்குரிய பலன் நமக்கு கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
அனைத்து விநாயகர் சிலைகளும், அனைத்து இடங்களிலும் வைத்து வழிபடுவதற்கு ஏற்றதல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட விநாயகர் வடிவங்களை மட்டுமே வீட்டில் வைத்து வழிபட வேண்டும். ஆன்மீக சாஸ்திரங்கள் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திர முறைப்படியும் இதுவே வலியுறுத்தப்படுகிறது. இன்னும் சில வடிவங்களை கோவில்களில் மட்டுமே வைத்து வழிபட வேண்டும். வேறு சில வடிவங்களை கடைகள் உள்ளிட்ட தொழில் செய்யும் இடங்களில் வைத்து வழிபடுவதற்கு ஏற்றதாகும். அதே போல் தெருவில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளுக்கும் விதிமுறைகள் உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் வைத்து வழிபடுவதற்கு விநாயகர் சிலை வாங்கும் போது எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :
1. அமர்ந்திருக்கும் விநாயகரை தான் வாங்க வேண்டும்.
2. நின்று கொண்டிருக்கும் விநாயகரையோ, நடனம் ஆகும் விநாயகரையோ வாங்கக்கூடாது.
3. அதே போல் திருஷ்டி விநாயகரை வாங்கக்கூடாது.
4. விநாயகருடைய துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
5. விநாயகரை சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வாங்க வேண்டும்.
6. விநாயகர் கையில் பிரசாதம் இருப்பது போன்ற சிலையை பார்த்து வாங்க வேண்டும்.
7. மூஷிக வாகனம் விநாயகர் பக்கத்தில் இருப்பதி போல் பார்த்து வாங்க வேண்டும்.
8. விநாயகர் கண்களை திறந்து உங்களை பார்ப்பது போல் இருக்கும் சிலையையே வாங்க வேண்டும்.
இந்த மாதிரி வாங்குவதன் மூலம் காரிய தடை நீங்கும். நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். விநாயகரின் முழு அருளும் அன்று நமக்கு கிடைத்துவிடும்.
