ஐபிஎல் இரண்டாவது சீசனில் இருந்து கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கை நீக்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக, டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் கேமங் பதானியை, புது தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய விரும்பினர். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. அடுத்து, ராகுல் டிராவிட்டிம் இதுகுறித்துப் பேசிய நிலையில், பிப்ரவரி முதல் ஜூன் முதல் வாரம் வரை மட்டுமே என்னால், சிஎஸ்கேவுடன் இருக்க முடியும் என தெரிவித்ததால், இவரை வாங்குவதில் இருந்தும் பின்வாங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு பயிற்சியாளர்களில் ஒருவரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகத்தை தொடர்புகொண்ட சுரேஷ் ரெய்னா, தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க தயார் என தெரிவித்துள்ளாராம். சிஎஸ்கேவில், 2008 முதல் 2021ஆம் ஆண்டுவரை ரெய்னா விளையாடியிருக்கிறார். அவர் விளையாடிய சமயத்தில், சிஎஸ்கே தொடர்ச்சியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், ரெய்னாவை புறக்கணிக்க முடியாத நிலைமையில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. அதேநேரத்தில், தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் ரெய்னாவுக்கு இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. இந்நிலையில், ரெய்னாவுக்கு சில சோதனைகளை நடத்த சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து, அவரிடம் சில கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, கடந்த மூன்று சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. பினிஷர் ரோலில் சரியான வீரர் இல்லை என்பதால்தான், இப்படி சிஎஸ்கே சொதப்பியது. இந்நிலையில், பினிஷர் இடத்திற்கு யாரை, டிரேடிங்கில் வாங்கினால் சரியாக இருக்கும் என்ற கேள்வியை சுரேஷ் ரெய்னாவிடம் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, ‘‘ஐபிஎல் 2028 சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், அடுத்த சீசனுக்கு மட்டும் ஒரு பினிஷர் கிடைத்தால் போதும். டெல்லி கேபிடல்ஸில் இருந்து டேவிட் மில்லரை வாங்க முடியும். இவருக்கு 37 வயதாகிறது. இருப்பினும், இன்னமும் நல்ல பார்மில்தான் இருக்கிறார். டெல்லி அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்படுவதால் அகில் ஹோசைனை அனுப்புங்கள். கூடுதலாக ராகுல் சஹாரை அனுப்ப தேவையில்லை’’
‘‘டெல்லி அணியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருப்பதால், மில்லரை அவர்கள் விட்டுக்கொடுக்க யோசிக்க மாட்டார்கள். ஒருவேளை, அகில் ஹோசைனை அவர்கள் விரும்பவில்லை என்றால், ராகுல் சஹாரை அனுப்பலாம். குல்தீப் யாதவுக்கு சரியான மாற்றாக ராகுல் சஹார் இருப்பார். இதனால், மில்லரை சுலபமாக வாங்க முடியும்’’ என சிஎஸ்கே நிர்வாகத்திடம் ரெய்னா தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில கேள்விகளை கேட்டுவிட்டு, சுரேஷ் ரெய்னாவை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுக்க உள்ளதாம். மேலும், டிரேடிங்கில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்குவது குறித்தும் சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், ரெய்னா கூறிய பிறகு, மில்லரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் பெரிய அளவில் தீவிரம் காட்டி வருகிறதாம்.
