தமிழக சட்டப்பேரவையில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ சுட்டிக் காட்டிய ஜே.கே டயர்ஸ் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அப்படி ஒரு நிறுவனமே அங்கு செயல்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ செய்தியாளரின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரமாக JK Tyres நிறுவனத்தின் பெயர் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். மதிப்புமிக்க மாநிலத்தின் சட்டப்பேரவையில் உண்மைக்கு மாறான தகவலை பதிவு செய்யலாமா? இது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமையும் எனப் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது தங்கள் தவறுகளை திருத்தி கொள்ளும் முயற்சியில் தவெக அரசு இறங்கியுள்ளது.
JK Tyres நிறுவனத்தை மூட வேண்டும் – எம்.எல்.ஏ தாஹிரா
நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தில் பேசிய ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, தனது தொகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஜே.கே டயர்ஸ் நிறுவனத்தை உடனடியான மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, திருத்தப்பட்ட விதிகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகள் செயல்பட அறிவுறுத்தப்படும். நமக்கு அந்த தொழிற்சாலையும் முக்கியம் என்றார். ஆனால் அதன்பிறகு விசாரித்த போது தான், அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்று தெரிய வந்தது.
அமைச்சர் கீர்த்தனா பேச தொடங்கியதும்….திமுக ரியாக்ஷன்
உரிய நடவடிக்கை – அமைச்சர் கீர்த்தனா உறுதி
இதுபற்றி அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், மாண்புமிகு உறுப்பினர் வேறொரு நிறுவனத்தை சுட்டிக் காட்ட முயற்சிக்கையில் தவறுதலாக ஜே.கே டயர்ஸ் நிறுவனத்தின் பெயரை கூறியிருக்கிறார். அதுபற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மிஸ்டேக் ஆயிடுச்சு – ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஒப்புதல்
இந்நிலையில் எம்.எல்.ஏ தாஹிராவை தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தார். அதற்கு பதிலளிக்கையில், நம்ம மிஸ்டேக் ஆயிடுச்சு. டைப் பண்ணி கொடுத்தவங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி கொடுத்திருக்காங்க. அம்மூர் எடப்பாளையத்தில் டயரை எரித்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்மீது புகார் வந்தது. அதை ஒட்டியே சட்டப்பேரவையில் பேசினேன் என்றார்.
AK Tyres – டயர்களை எரிக்கும் நிறுவனம்
இதுபற்றி ராணிப்பேட்டை பகுதியில் விசாரித்தால், ஏ.கே டயர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது பழைய டயர்களை உருக்கும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்கின்றனர். இங்கு எரிக்கப்படும் டயர்களால் கரும் புகை வெளியாகி சுற்றுவட்டாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு பலவிதமான சுவாசக் கோளாறுகள் உண்டாகின்றன. இதுபற்றி தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பலகட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாற்று நடவடிக்கைகளோ, சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஏ.கே டயர்ஸ் நிறுவனத்தை தான் சட்டப்பேரவையில் தவறுதலாக ஜே.கே டயர்ஸ் என்று எம்.எல்.ஏ தாஹிரா பேசியிருப்பதாக கூறுகின்றனர்.
எம்.எல்.ஏக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. அதில் பேசும் தகவல்களை இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என வருங்கால தலைமுறையினர் பலர் பார்த்து வருகின்றனர். சட்டப்பேரவை செயல்பாடுகளை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதனை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களே சுட்டிக் காட்டியுள்ளார். எனவே இங்கு உண்மைக்கு மாறான தகவலை பதிவு செய்யாமல் பேச வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கிறது.
Source link
