“கொஞ்சம் டைம் கொடுங்க…” – தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முந்தைய அரசுகள் கஜானாவை காலியாக்கிவிட்டதாகவும், இருப்பினும் கலந்து பேசி உங்களது கோரிக்கை படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, “இந்த 100 நாட்களில் முதல்வர் எதெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறார். முதல்வரின் மனசு இங்கு தான் இருக்கிறது. போராட்டம் நடைபெற்ற முதல் நாளிலேயே இங்கு வரலாமே என்று நீங்கள் கேட்கலாம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரச்சனை என்னவென்று கேட்க வரலாம், ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் பொது பிரச்சனையை சரி செய்துவிட்டு தான் இங்கு வர வேண்டும். நிர்வாக ரீதியான பல சிக்கல்கள் இருக்கிறது. தமிழ்நாட்டின் போன ஆட்சிகளில் எல்லா துறையிலுமே அவுட் ஷோர்சிங் போட்டு தனியார்மையப்படுத்திவிட்டார்கள். 100 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் 10, 10 பேராக வேலைக்கு சேர்த்திருந்தால் அதற்கான சம்பள பிரச்சனை வந்திருக்காது. 5 வருடத்திலேயே அந்த 100 பேருக்கும் வேலை கொடுத்திருக்கலாம்.

ஆனால், 5 வருடமாக யாரையுமே வேலைக்கு வைக்காமல் அனைத்தையும் அவுட் ஷோர்சிங் போட்டா புதிதாக வந்த அரசு எப்படி, எடுத்த உடனே 100 பேருக்கு வேலை போட்டு சம்பளம் கொடுக்க முடியும்? இதை உங்களிடம் நாங்கள் சொல்ல வேண்டும். முதல்வர் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதை உங்களிடம் சொல்கிறோம். நீங்கள் இங்கு உட்கார உட்கார எங்களுக்கு தூக்கம் வர மாட்டிக்குது, முக்கியமாக எங்கள் முதல்வருக்கு தூக்கம் வரவில்லை. போன ஆட்சி மாதிரி இரவோடு இரவாக கைது செய்யப்போவதில்லை. ஒருத்தர் மேல் கூட கை வைக்கக்கூடாது என முதல்வர் சொல்லிருக்கிறார். கடன் வாங்கி தான் நல்லது செய்கிறோம். கடன் வாங்குவதற்கு 100 நாள் ஆட்சிக்கு வந்த விஜய் அண்ணாவா காரணம்? 50 வருடமாக யார் ஆட்சியில் இருந்தார்கள்? 30 வருடமாக எந்த குடும்பம் ஆட்சியில் இருந்தது? போன ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள், இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் திட்டத்துக்கு செலவு செய்கிறோம். கொஞ்சம் டைம் கொடுங்கள், கண்டிப்பாக முதல்வர் ஓவ்வொரு மக்களுடன் இருப்பார். முதற்கட்டமாக என்னென்ன செய்ய முடியும் என்பதை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்” என்று பேசினார். 

Source link