Madurai Meenakshi temple kumbabishekam 2026 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2026 : கங்கையில் இருந்து புனிதநீர் வரவழைப்பு

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் :

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 17ம் தேதியன்று காலை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 07.40 மணி துவங்கி, 08.10 மணிக்குள் கும்பாபிஷேக வைபவங்கள் நடைபெற உள்ளன. முன்னதாக செப்டம்பர் 16ம் தேதியன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மதுரை நகரமே இந்த விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.

பூர்வாங்க பூஜைகள் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கங்கை உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 7 புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவகிரக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 06ம் தேதி தொடங்கியது. சித்தி விநாயகர் சன்னதியில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பசு, யானை, குதிரைகளை கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதை தொடர்ந்து பிராமண அனுக்ஞை என்னும் உத்தரவு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரூ.20 நாணயங்களை கொண்டு தன பூஜையும், அஸ்வ(குதிரை) பூஜையும், 3 யானைகள் பங்கேற்ற கஜபூஜையும், கோ பூஜையும் நடந்தது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சித்தி விநாயகருக்கு வேத மந்திரங்கள் முழங்க மகாஅபிஷேகம் நடந்தது. பின்பு தேவதா அனுக்ஞை பெற்று (சுவாமியிடம் அனுமதி பெறுதல்) தீபாராதனை நடந்தது.

1008 லிட்டர் கங்கை நீர் :

யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 11ம் தேதி துவங்கி, செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ம் தேதியன்று மண்டல பூஜை துவங்க உள்ளது. செப்டம்பர் 18ம் தேதியுடன் மண்டல பூஜைகள் நிறைவு பெற உள்ளன. இதனையொட்டி வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டும், கலசங்களில் புனித நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ரூ.21 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை சுற்றி 58 இடங்களில் பார்க்கிங் வசதி செய்ப்பட உள்ளது. கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன.

Source link