நவீன கால அறிவியலுக்கு சவால்விடும் வகையிலும், மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மிகுந்த பல ஆச்சரியங்கள், விடை காண முடியாத அதிசய நிகழ்வுகள் இன்றும் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இறைவனின் ஆற்றல், மனிதனாலும் அறிவியல் தொழில்நுட்பத்தாலும் அளவிட முடியாத கணிக்க முடியாதது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நவீன காலத்திலும் பல ஆச்சரியங்கள், அதிசயங்கள் நிறைந்த கோவில்கள் இருப்பது பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இது போன்ற அமானுஷ்யங்கள், நம்ப முடியாத நிகழ்வுகள் கொண்ட கோவில்கள் வட மாநிலங்களில் மட்டுமல்ல தமிழகத்திலும் பல உள்ளன.
நம்ம முடியாத ஆச்சரியங்கள் தினமும் நிகழும் இந்த கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அப்படி அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசய ஆற்றல் கொண்ட 4 தெய்வீக சிலைகள் அமைந்துள்ள கோவில்கள் பற்றியும், அந்த தெய்வீக சிலைகளின் தனித்துவம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அறிவியலுக்கு அப்பாற்பட்ட 4 தெய்வீக சிலைகள் :
1. மனிதர்களைப் போல் நாடித்துடிப்பு கொண்ட விநாயகர் :
குற்றாலம் சித்தேஸ்வரி பீடத்தில் உள்ள சித்தி விநாயகர் சிலை (நாடி கணபதி), மனிதர்களைப் போல் நாடித்துடிப்புடன் இயங்கும் தன்மையைக் கொண்ட தெய்வீக சிலையாகும். இதை திருநெல்வேலி மாவட்டம் மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப் மூலமாகவும், புவியியல் நிபுணர்கள் கல் அமைப்பையும் பரிசோதித்து உறுதி செய்துள்ளனர். இதனால் இக்கோவில் ஸ்ரீ நாடி கணபதி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
2. எண்ணெய் முழுவதையும் உறிஞ்சும் அதிசய சிவலிங்கம்:
சித்திரை திருவிழாவின் போது, நீலகண்டேஸ்வரர் லிங்கத்தின் மீது எத்தனை முறை எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், எண்ணெய் முழுவதையும் சிவலிங்கம் உறிஞ்சிக் கொள்ளும். லிங்கம் எப்போதும் வறண்ட நிலையிலேயே காட்சியளிப்பது இத்தலத்தின் தெய்வீக அதிசயமாகப் போற்றப்படுகிறது. இந்த அதிசய சிவலிங்கம் கும்பகோணத்தில் உள்ள திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் தான் உள்ளது.
3. தூக்க தூக்க எடை கூடும் கல் கருடர் சிலை :
கும்பகோணம் நாச்சியார் கோவில் கல் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் உள்ள கருட மூர்த்தி, முழுக்க கல்லால் ஆவது. கருட சேவை உற்சவத்தின் போது இதன் எடை கூடிக் கொண்ட போய், ஆரம்பத்தில் 4 பேர் மட்டுமே தூக்கும் இந்த சிலை பிறகு எடை அதிகரித்து 8, 16, 32 என சுமக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதே போல் சன்னதிக்கு திரும்பும் போது எடை படிப்படியாக குறையும் அதிசயத்தையும் நாம் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
4. 100 கிலோ அபிஷேகத் தேனை உறிஞ்சும் விநாயகர் :
இக்கோவில் விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவில் 100 கிலோ தேனுடன் பிரத்யேகமான அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு முழுவதும் ஊற்றப்படும் தேன் அனைத்தும் இந்த சிலையால் உறிஞ்சப்படுவது மிகப் பெரிய அதியம் ஆகும். அபிஷேகத்தின் முடிவில் விநாயகர், தங்க நிறத்தில் காட்சியளிப்பது கூடுதல் சிறப்பானதாகும். இந்த அதிசய விநாயகர், கும்பகோணம் திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.
