கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நீதிபதி கோகுல்தாஸ், அரசு கள் இறக்க, விற்க அனுமதி வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த பகுதிகளில் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது என குறிப்பிட்டுள்ளார்.
பூரண மது விலக்கு கோரிக்கை
முன்னதாக தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென பல போராட்டங்கள் மற்றும் தனிநபர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
மேலும் தந்தை மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பம் மோசமான நிலையில் சிக்கியதாக கூறி டாஸ்மாக்கை மூட வேண்டுமென சிலர் கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவங்களும் தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இப்படியான சூழலில் இது போன்று சட்டவிரோத கள்ளச்சாராயம் குடித்து தமிழகத்தில் தொடர்ந்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 67 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
கோகுல்தாஸ் ஆணையம் வழங்கிய முக்கிய பரிந்துரைகள்
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் அல்லது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம். டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50 சதவீதம் குறைக்கலாம். விலை குறைப்புக்காக மதுபானங்களை டெட்ரா பேக்கில் அடைத்து விற்க பரிசீலிக்கலாம். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றலாம். ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கலாம்.
உடனடியாக பூரண மதுவிலக்கு சாத்தியமா?
மேலும் தற்போதைய சூழலில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது, சில விரும்பத்தக்காத நிகழ்வுகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. பூரண மதுவிலக்கால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரிக்க கூடும். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை உடனடியாக அதில் இருந்து மீட்க முடியாது. இதற்கு தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
போதை மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். சட்ட விரோத கள்ளச்சாராய விற்பனைகளை முழுமையாக களைய வேண்டும். மறுவாழ்வு மையங்களுக்கு தேவையான மனநல ஆலோசகர் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.இது போன்ற பல நடைவடிக்கைகள் மேற்கொண்டு செயல்படுத்திய பின்பே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியுமே உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Source link
