Property Registration,சொத்துப் பதிவுக்கு அதிக லஞ்சம் கொடுக்க வேண்டும்: ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் – more people paying bribes at property registration land offices to transfer assets says a report

இன்றைய காலகட்டத்தில் சொத்துப் பதிவு விஷயத்தில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. குறிப்பாக, உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களின் சொத்து களை மாற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறு முயற்சிக்கும்போது, சொத்து பதிவு மற்றும் நிலப் பரிமாற்ற அலுவலகங்களில் பலர் லஞ்சம் கொடுக்கின்றனர். இது தொடர்பாக திடுக்கிடும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. லோக்கல் சர்க்கிள் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 73 சதவீதப் பேர் சொத்துப் பதிவுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், 32 சதவீத குடும்பங்கள் மட்டுமே எளிதாக சொத்துகளை மாற்ற முடிவதாகக் கூறியுள்ளனர். ஆனால், 58 சதவீதப் பேர் தாங்கள் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாகவும், சிலர் பல இடங்களிலும் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நில ஆவணங்கள் மற்றும் அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வாரிசுரிமை தொடர்பான பரிமாற்றங்களில் ஊழல் தொடர்வதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சொத்துகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், வங்கி கணக்குகள், நகைகள் போன்றவற்றை மாற்றுவது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

349 மாவட்டங்களைச் சேர்ந்த 32,000க்கும் மேற்பட்ட குடிமக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சொத்துகளை மாற்றுவது எளிதல்ல என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் வாரிசுரிமையை பெறுவது கடினமான பணியாகும். உயில் சரியாக எழுதப்பட்டிருந்தாலும், வாரிசுதாரர்களுக்கு இடையே இணக்கம் இல்லாவிட்டால் வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்று பல ஆண்டுகள் ஆகின்றன என்று லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 11,319 பேர் பதிலளித்த நிலையில், அவர்களில் 32 சதவீதப் பேர் மட்டுமே தாங்கள் எளிதாகச் சொத்துகளை மாற்றியதாகக் கூறினர். 16 சதவீதப் பேர் பதிவு செய்யப்பட்ட உயில் இருந்தும் மாற்ற முடியவில்லை என்று தெரிவித்தனர். லஞ்சம் கேட்டதாகக் கூறியவர்களில் 29 சதவீதப் பேர் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், 29 சதவீதப் பேர் பல இடங்களிலும் லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்தனர்.

நிலப் பதிவு மற்றும் நிலப் பரிமாற்ற அலுவலகங்களில்தான் அதிகளவில் லஞ்சம் கைமாறுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த நடைமுறைகளை ஆன்லைனுக்கு மாற்றுவதற்கும், இடைத்தரகர்களைத் தவிர்ப்பதற்கும் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வந்தாலும் நடைமுறை சிக்கல்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து உரிமையியல் வழக்குகளில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கு நிலம் மற்றும் சொத்து விவகாரங்கள் தொடர்பானதாகவே தொடர்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இந்த விஷயத்தில் சிக்கல்கள் இயற்பியல் சொத்துகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. முதலீட்டாளர் அல்லது கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், புரோக்கரேஜ் கணக்குகள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகளை மாற்றுவதிலும் குடும்பங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சொத்துப் பதிவு என்பது பல சந்தர்ப்பங்களில் இன்னமும் நேரடி நடைமுறைகளையே சார்ந்துள்ளது என்று லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. இதில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நேரில் ஆஜராகுவது, ஆவணங்களை நேரடியாகச் சமர்ப்பிப்பது, கைரேகைகள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வது மற்றும் அசல் பதிவுச் சான்றிதழ்களை வழங்குவது ஆகியவை அடங்கும். இத்தகைய நடைமுறைகள் சொத்துப் பரிமாற்றத்தை அதிக நேரம் எடுப்பதாக மாற்றுவதுடன், இடைத்தரகர்கள் நுழைவதற்கும் அதிகாரிகளின் தன்னிச்சையான தலையீடுகளுக்கும் வழிவகுப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Source link