Rain: இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட் மெசேஜ்!

சென்னை: நேற்று இரவு திருச்சி, பெரம்பலூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று மதுரை, சிவகங்கை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பெரம்பலூர் மற்றும் அருமடல், கவுபாளையம், எறையூர், பேரளி, துறைமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர்ப்பகுதிகள் மற்றும் கண்ணமங்கலம், சந்தவாசல், சேவூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, பொன்னை, வள்ளிமலை, லத்தேரி, குடியாத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கொட்டித்தீர்த்த மழையால், ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் தத்தளித்துச் சென்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தங்கல், சாட்சியாபுரம், விளாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, பழைய வத்தலகுண்டு, மல்லனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொடைக்கானலில் மாலை நேரத்தில் பெய்த மழையால் குளிர் அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம், அல்லிநகரம், அரண்மனைப் புதூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

நாகை மற்றும் கீழ்வேளூர், தேவூர், திருமருகல், நாகூர், சிக்கல், வலிவலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், கல்லார் உள்ளிட்ட இடங்களில் வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உதகையில் சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ததால் குளுகுளு காலநிலை நிலவியது.

இதனிடையே, தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இவை தவிர, மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவையில் வரும் 16 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.