TN Govt Employees And TAPS,TAPS திட்டத்தில் முக்கிய அப்டேட்: அறிக்கையை வெளியிட முடியாது – அரசு ஊழியர்கள் அதிர்ச்சி – tamil nadu govt employees not satisfied with gagandeep report related updates regarding taps

ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான வல்லுநர் குழு கடந்த 2025 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வல்லுனர் குழு 7 கட்டங்களாக 194 சங்கங்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி 2025 டிசம்பர் 30ஆம் தேதியன்று அன்றைய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் தனது அறிக்கையை வழங்கியது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ( TAPS ) நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்த தவெக தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை இடைக்கால ஏற்பாடாக இடைக்கால அரசாணை வெளியிட்டு TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

மேலும் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான வல்லுனர் குழு அறிக்கையின் படி TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு கடன் வாங்க அனுமதி வழங்கினால் TAPS திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அடுத்து, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக, பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற அரசு ஊழியர் தமிழக நிதித்துறையிடம் வல்லுநர் குழு அறிக்கையை வழங்கும்படியும், டெல்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (PFRDA) தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை விவரம் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டிருந்தார்

அதற்கு தமிழக நிதித்துறை அளித்துள்ள பதிலில், குழுவின் அறிக்கை மீது பரிசீலனை மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அறிக்கையை வழங்க இயலாது என்று தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பாக இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டு அதை நடைமுறைப்படுத்திவரும் நிலையில் அது குறித்த வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி:

முன்னதாக, TAPS திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்தனர். இதுபோன்ற பல போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

TAPS திட்டத்திற்கான முழுமையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை, 2026 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியான சி.பி.எஸ் (CPS) ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திர வாழ்வாதாரத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

TAPS திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்தும், இடைக்காலப் பலன்களை விரைவுபடுத்துவது குறித்தும் அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் முறையான விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஜனவரி 1 மற்றும் அதற்குப் பிறகு ஓய்வு பெறும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்த சி.பி.எஸ் (CPS) ஊழியர்கள் இதற்கு தகுதியானவர்கள் ஆவர். கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 10,000 (எது அதிகமோ அது) வழங்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொண்டுள்ள ஊழியர்கள் அல்லது வேறு வழிகளில் சேவை இழந்தவர்களுக்கு இந்த இடைக்காலப் பலன் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link