Zee 5 தமிழா தமிழா: 3 லட்சம் சம்பாதிக்கணும்.. நானே கணவனுக்கு சரக்கு ஊற்றி தரணும்.. இதுவே கனவு

சென்னை: Zee 5 தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜென் ஜி (Gen Z) தலைமுறைப் பெண்கள், தங்களின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் அம்மாக்களின் முன்னிலையிலேயே இந்த எதிர்பார்ப்புகளைப் பேசியிருந்தனர். அதில் சில பெண்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டுப் பலர் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

ஒரு பெண், “எனக்கு வரப்போகும் கணவர் மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும். அவர் பிசினஸ் தான் செய்ய வேண்டும். அவருக்கு முழுமையாக தாடி இருக்க வேண்டும். கேடிஎம் பைக் வைத்திருக்க வேண்டும். அப்புறம் அவருக்குக் குடிப்பழக்கம் வேண்டாம் என்று பலர் சொல்வார்கள்; ஆனால், நானே அவருக்கு மது ஊற்றிக் கொடுக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நெறியாளர் ஆவுடையப்பன், “நீங்கள் ஏன் ஊற்றிக் கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண், “நான் அவருக்கு ஊட்டிவிட வேண்டும். இந்தத் பழக்கத்தால் நிறையக் காதல்கள் பிரிந்துபோயிருக்கின்றன. நான் யாரையும் காதலிக்கவில்லை; எனக்கு இலக்கே அதுதான் சார். நமக்கு ஒருத்தர் வருகிறார் என்றால் அவர்களுக்கு எல்லாமே நாமே செய்ய வேண்டும். ஊட்டிவிடுவது முதல் சமைப்பது வரை, சாப்பாடு போடுவதிலிருந்து மது ஊற்றிக் கொடுப்பது வரை எல்லாமே நானே பண்ண வேண்டும்,” என்றார்.

அதற்கு நெறியாளர், “ஊட்டிவிடுவது ஓகே அம்மா… ஊற்றிக் கொடுப்பது எப்படிச் சரியாகும்?” எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண், “குழந்தைகளையும் நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். என் வருங்காலக் கணவருக்குச் சரக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்பது என் கனவு சார். சின்ன வயதிலிருந்தே என் அம்மா, என் அப்பாவிடம் ‘குடிக்கக் கூடாது, குடிக்கக் கூடாது’ என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அதனாலேயே என் அப்பா மிகவும் டார்ச்சர் ஆகிவிட்டார்; அவருக்கு நிறைய நோய்களெல்லாம் வந்திருக்கின்றன சார். என் கணவர் அதுபோல ஆகக் கூடாது என்பதற்காக நானே அவருக்கு ஊற்றிக் கொடுக்க நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

எனக்கு வர போற புருஷனுக்கு 3 லட்சம் சம்பளம் இருக்கணும். இருந்தா அவனுக்கு நானே சரக்கு ஊத்தி குடுப்பேன், அதான் என் கனவு – genz
அடடா..என்ன மாதிரியான கனவு pic.twitter.com/IKEMa6GRsy

இதைக் கேட்ட நெட்டிசன்கள், “மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்றால் என்ன படித்து, என்ன வேலையில் இருக்க வேண்டும் தெரியுமா?” என்று கேட்டுள்ளனர். “ஆஹா… என்ன மாதிரியான கனவு!” என கிண்டலும் செய்து வருகிறார்கள். “பெண்களின் எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு மாற என்ன காரணம்?” என்றும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

“3 லட்சம் ரூபாயை 28 வயதில் ஒரு இளைஞர் சம்பாதிக்க வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு மிகப்பெரிய உழைப்பு தேவை. அப்படி உழைப்பவர்களுக்கு நிற்கக்கூட நேரம் இருக்காது. அப்படிச் சம்பாதிப்பவர்கள், தங்களைப்போலவே மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் பெண்ணையே திருமணம் செய்ய விரும்புவார்கள் என்பதே உண்மை. சராசரியாகப் பெண்களின் எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு இருந்தால், பல ஆண்களுக்குத் திருமணமே நடக்காமல் போகும்; அப்படியே நடந்தாலும் அது நிலைக்காது,” என்றும் நெட்டிசன்கள் ஆதங்கப்படுகிறார்கள்.