சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் முக்கிய குற்றவாளிகளான பரணி, கார்த்திக், ஹரிஹரன், மணி மற்றும் நரேஷ் ஆகிய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்த 5 பேரிடம் சாஸ்திரி நகர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலையானது கடந்த 2009ஆம் ஆண்டு அடையாற்றில் நடந்த சிவா என்பவரின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் சமீபத்தில்தான் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
அதே சமயம் இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். மேலும், சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
