அ.தி.மு.க-வுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ள நாம் தயாரா? பூங்குன்றன் கேள்வி

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் இரும்புக்கோட்டையாகக் காக்கப்பட்ட அ.தி.மு.க, இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு பல்வேறு உட்கட்சிப் பூசல்களையும் பிளவுகளையும் சந்தித்து வருகிறது. தலைமைகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளால் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா போன்ற முக்கியப் புள்ளிகள் அணியாகப் பிரிந்து இயங்கி வரும் சூழலில், தொடர் தேர்தல் பின்னடைவுகளும் உட்கட்சி விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில் தான், சுய கவுரவத்தை விட்டுவிட்டு ‘நான்’ என்பதற்குப் பதில் ‘நாம்’ என்ற சிந்தனையோடு அக்கட்சி மீண்டும் ஒற்றைக் குடையின் கீழ் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில்தான், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் அ.தி.மு.க-விற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். மேலும், பிரிந்து சென்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைத்து இயக்கத்தை வளர்த்தெடுக்க அக் கட்சியினர் தயாரா எனத் தனது முகநூல் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் முன்னால் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசியலில் நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ கிடையாது; மாறாக, காலமும் சூழ்நிலையும் வழங்கும் வாய்ப்புகளே ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது என்று என் உள்மனம் சொல்கிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இயக்கத்தை மீண்டும் உத்வேகத்துடன் வளர்த்தெடுக்க நாம் தயாரா? 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களாலும், புரட்சித் தலைவி “அம்மா” அவர்களாலும் வியூகம் வகுத்து, ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட இயக்கம் இது. இன்று இந்தக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள், உயர் பதவிகளை வகித்தவர்கள், மற்றும் தொண்டர்களாக இருப்பவர்கள் என அனைவரும் அந்த மாபெரும் தலைவர்களால் உயர்த்தப்பட்டவர்களே..! இந்த இயக்கம்தான் நம் அனைவருக்கும் அடையாளத்தையும் முகவரியையும் தந்தது. அப்படிப்பட்ட பேரியக்கத்தின் நலனுக்கு முன், தனிப்பட்ட சுயநலமோ கடந்த கால கசப்புணர்வுகளோ எப்போதும் பெரிதாக இருக்க முடியாது.
​
காலத்தின் சூழல் காரணமாகப் பிரிந்து சென்றவர்கள் எவரும் கட்சியையோ, அதன் கொள்கைகளையோ எதிர்த்துப் பிரிந்து செல்லவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், சிறு தவறான புரிதல்களுமே அவர்களைத் தனிமைப்படுத்தின. நமக்குள் இருக்கும் பிளவுகளை சரி செய்ய வேண்டிய நேரமிது.
“நான் என்ற சிந்தனை மறைந்து நாம் என்ற சிந்தனை மலர வேண்டும்”, அப்போதுதான் உண்மையான வெற்றி சாத்தியமாகும். சுய கவுரவத்தை ஓரமாக வைத்துவிட்டு, “வந்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்ற பரந்த பார்வையோடு பிரிந்து சென்ற சொந்தங்களை அரவணைக்க வேண்டும். இதயதெய்வங்கள் வளர்த்த இந்தக் கட்சியில், பிளவுகளைக் கடந்து அனைவரும் ஒற்றைக் குடையின் கீழ் கைகோர்க்கும்போதுதான் அது யாராலும் தகர்க்க முடியாத கோட்டையாக மாறும்.
​
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இனி அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற காலத்தில், காலம் நமக்குத் தந்துள்ள இந்தத் தருணம் மீண்டும் வராது. கடந்த காலங்களை மறந்து, பொதுநலத்தை முன்னிறுத்தி, அனைவரும் ஒன்றுபட்டு நின்று மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தால், இழந்த இடங்களை மீட்பதுடன் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாபெரும் சக்தியாக அதிமுக மிளிரும்.
​இந்த மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தயாரா?” என்று பூங்குன்றன் அ.தி.மு.க-வினரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link