அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது:62 அணைகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் கொள்ளளவு

கரூர்: தமிழகத்தில் உள்ள அணைகளில், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கு கீழ் நீர் கொள்ளளவு உள்ளதால், கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகளில், 224.34 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளுக்கு, தென்மேற்கு பருவமழை வாயிலாக அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இதுவரை கைகொடுக்கவில்லை. வெயில் அதிகமாக இருப்பதால், அணைகளில் நீர் வேகமாக சரிந்து வருகிறது. இன்றைய( செ ப்.,09) நிலவரப்படி 90 அணைகளில், 91.60 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது, 40.83 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 90 அணைகளில், 191.80 டி.எம்.சி., நீர் இருப்பு இருந்தது. அதாவது, 85.51 சதவீதம் இருந்தது. இதை ஒப்பிடும் போது, 100.20 டி.எம்.சி., இருப்பு குறைவாக உள்ளது.

திருச்சி மண்டலத்தில் முக்கிய அணையாக, 120 அடி உயரமும், 93.47 டி.எம்.சி., கொள்ளளவும் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம், 91.50 அடியாகவும், 54.38 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் முழு கொள்ளளவில் நீர் இருப்பு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 39.09 டி.எம்.சி., தண்ணீர் குறைவாக உள்ளது.

கோவை மண்டலத்தில், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில், 52.22 அடி, 4.99 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளுடன் ஒப்பிடுகயைில், 24.45 டி.எம்.சி., குறைவாக உள்ளது. 72 அடி, 13.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில், 50.13 அடியும், 8.71 டி.எம்.சி., நீரும் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட, 4.63 டி.எம்.சி., தண்ணீர் குறைவாக உள்ளது. 90 அடி, 4.05 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில், 41.05 அடியும், 0.78 டி.எம்.சி. தண்ணீரும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளுடன் ஒப்பீடுகையில், 3.1 டி.எம்.சி., தண்ணீர் குறைவாக உள்ளது.

மதுரை மண்டலத்தில், 142 அடி உயரம், 7.67 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில், 120.65 அடி, 2.76 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட, 2.84 டி.எம்.சி., தண்ணீர் குறைவாக உள்ளது. 71 அடி, 6.09 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட வைகை அணையில், 39.44 அடியும், 0.9 டி.எம்.சி., தண்ணீரும் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஒப்பீடுகையில், 4.56 டி.எம்.சி., தண்ணீர் குறைவாக உள்ளது.

இதுமட்டுமின்றி, 2 அணைகளில், 76 முதல் 99 சதவீதம் நீர் இருப்பும், 12 அணைகளில், 51 முதல், 75 சதவீதம் நீர் இருப்பும், 14 அணைகளில், 25– முதல் 50 சதவீத நீர் இருப்பும், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கும் கீழ் நீர் இருப்பு உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மணிமுக்தாநதி, கடலுாரில் வெலிங்டன், தர்மபுரியில் வாணியாறு, திருநெல்வேலியில் வண்டல் ஓடை, திண்டுக்கல்லில் சிறுமலையாறு ஓடை, மதுரையில் சாத்தையாறு, விருதுநகரில் சாஸ்தாகோவில், ஆணைக்குட்டம், கோல்வார்பட்டி, திருப்பூரில் நல்லதங்காள் ஓடை, அரியலுாரில் சித்தாமல்லி, திருச்சியில் உப்பாறு ஆகிய அணைகள் முற்றிலும் வறண்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை பொய்த்தால், பாசனத்திற்கு மட்டுமின்றி, பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது என, நீர்வளத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Source link