-சிறப்பு நிருபர்-
புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை திறப்பதற்கு முன், அங்கு போதுமான பசுமையை உறுதிசெய்யும் வகையில், குறைந்தபட்சம் 80 சதவீத நிலப்பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், குறைந்தபட்சம் 90 சதவீத பிழைப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டில்லியில் உள்ள, ‘நஹாய்’ எனப்படும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் விபரம்:
புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், அது வணிக ரீதியான பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானது என சான்று அளிப்பதற்கு முன், ஒப்புக் கொள்ளப்பட்டபடி மரக்கன்றுகள் நடும் பணிகள் கணிசமான அளவில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது, நெடுஞ்சாலையில் பசுமை மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட பாதையில் குறைந்தபட்சம், 80 சதவீத நிலப்பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், குறைந்தபட்சம் 90 சதவீத பிழைப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும்.
மீதமுள்ள மரக்கன்றுகளை நட்டு முடிக்கும் வரையிலும், இலக்கை முழுமையாக அடையும் வரையிலும் ஒப்பந்தத்தின்கீழ் நிதியைப் நிறுத்தி வைக்கும் நடவடிக்கை தொடரும்.
மேலும், பட்டுப்போகும் மரக்கன்றுகளுக்குப் பதிலாக, அதே வயது மற்றும் வளர்ச்சி கொண்ட செடிகளை நட்டு பசுமையின் சீரான தன்மையைப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஆய்வு செய்தபோது, சாலை நடுப்பகுதிகள் மற்றும் இருபுறங்களிலும், மரக்கன்றுகளை வளர்ப்பது, ஒப்பந்தப் படி கட்டாயம். இருந்தபோதிலும், அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டதாலேயே, இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
