அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் உலகத் தலைவர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான நட்பு குறித்துப் பேசிய கோர், ”டிரம்ப்பை சந்திக்க 35 உலகத் தலைவர்கள் வருவதாக டிரம்ப்பிடம் கூறி, யாரை முதலில் பார்க்க அவர் விரும்புவார் எனக் கேட்டுப் பாருங்கள். அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருப்பார்” என்று தெரிவித்தார். இது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரபல ஊடகத்திற்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், தான் மிகவும் மதிக்கும் மற்றும் விரும்பும் உலகின் இரு முக்கியத் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடியைக் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வருகிற டிசம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் 35 உலகத் தலைவர்களில், டொனால்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் முதலில் சந்திக்க விரும்புவது பிரதமர் மோடியைத்தான் என்றும் தூதர் செர்ஜியோ கோர் குறிப்பிட்டிருந்தார். இது இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவைக் காட்டுவதாக கூறப்படுகிறது.
