இ.பி.எஸ். தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு : போலீசார் விசாரணை!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று (03.09.2026) பேசுகையில், “சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தில் என்னுடைய தோட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு (01.09.2026) கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த போர்வெல் மின் மோட்டர்களின் வயர்களை அறுத்து எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதை நான் எங்கே போய் சொல்வது?” எனத் தெரிவித்திருந்தார்.

அதாவது, சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர் கோவிந்தராஜுக்கு சொந்தமான சுமார் ஏழு ஏக்கர் பாக்குத் தோப்பு உள்ளது. இங்கு ஆழ்துணைக் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்த, ஆழ்துணைக் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் வயர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடந்த ஒன்றாம் தேதி திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் கோவிந்தராஜ் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மின் மோட்டார் வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் சட்டமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான தோப்பில் மின் மோட்டார் வயர்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link