”அந்த யானையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்”; வனத்துறையினர் துரித நடவடிக்கை

அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இப்பகுதியில் யானைகள் உணவு தேடிவருவது வழக்கம். அப்போது, அப்பகுதியில் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்ட நிலையில்,  காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.  

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ”கழுத்தில் டயர் மாட்டியுள்ள யானை ஏற்கனவே மிகுந்த அசௌகரியத்தில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் அதை நெருங்கவோ அல்லது தொந்தரவு செய்யவோ வேண்டாம்” எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அந்த யானையைத் தொடர்ந்து தேடிவந்தனர்.  நேற்று மாலை அந்த யானை இருக்கும் இடம் கண்டறியப்பட்ட நிலையில், வனத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.  பின்பு அந்த யானைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பலமணி நேரத்திற்குப் பிறகு யானையின் கழுத்தில் இருந்த டயர் நீக்கப்பட்டது.  

வனத்துறையினரின் இந்த துரித நடவடிக்கையால், யானை எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்பு, யானைக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மீண்டும் அந்த யானை அதன் கூட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. வனத்துறையினரின் இந்த துரிதமான நடவடிக்கையை இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.  

Source link