நடிகர் சூரி காமெடியன் கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறிய பிறகு அவரின் மார்க்கெட் நிலவரம் ஏர் முகமாகவே இருக்கிறது. தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கும் சூரிக்கு அது வெற்றியை கொடுத்து வருகிறது. இதுவரை இவர் நாயகனாக நடித்த படங்கள் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு வரவேற்பை பெறும் நோக்கில் மண்டாடி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை எந்த அளவு ஈர்த்திருக்கிறது என்பதை பார்ப்போம்….
ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய கடலோர கிராமங்களில் பாய்மர படகு போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஊர் அணிக்காக கலந்து கொண்ட மிதுன் ஜெய்சங்கரை எதிராளிகள் கொல்ல துடிக்கின்றனர். இதனால் அவர் தப்பித்து சென்னைக்கு வந்து பிரபல தீம் பார்க்கில் உள்ள நீச்சல் குளத்தில் வேலை செய்து வரும் சூரியிடம் தஞ்சம் அடைகிறார். பாய்மர படகு போட்டியில் மிகப்பெரும் ஜாம்பவானான சூரி இந்த பிரச்சனை காரணமாக 20 ஆண்டுகளுக்கு பின் மிதுனை அழைத்துக் கொண்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்ல நேர்கிறது.
ராமேஸ்வரத்திற்கு வந்து இறங்கும் சூரி மிதுனை காப்பாற்ற போராடுகிறார். சூரி விட்டு சென்ற படகு ரேஸை மீண்டும் கையில் எடுக்கும் பட்சத்தில் அதில் ஜெயித்தால் மிதுனை காப்பாற்ற முடியும் என்ற சவால் விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் படகு ரேஸில் குதிக்கும் சூரி வென்றாரா, இல்லையா? மிதுன் காப்பாற்றப்பட்டாரா, இல்லையா? சூரி ஏன் 20 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறார்? அவர் ஏன் படகு ரேஸை புறக்கணித்தார்? என்பதற்கான பதில்களே இப்படத்தின் மீதி கதை.
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை கூறப்பட்டது இல்லை. புதிதாக பாய்மர படகு ரேஸை மையமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா-வை உருவாக்கி அதை திறன் பட கையாண்டு சிறப்பான முறையில் கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கிட்டத்தட்ட சார்பட்டா படம் போல் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் அதை நேட்டிவிட்டி மாறாமல் நேர்த்தியாகவும் அதேசமயம் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ரசிக்கும்படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் வேகமாக நகர்வது பிளஸ்-ஆக அமைந்திருக்கிறது. அதேசமயம் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியதற்கு கூடுதல் சிறப்பு. இருந்தும் படத்தில் எக்ஸ் ஃபாக்டர் ஆங்காங்கே மிஸ்-ஸாகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் ஏற்கனவே பார்த்து பழகிய படி இருப்பது சற்றே மைனஸாக அமைந்திருக்கிறது. கதாபாத்திர வகைகளை இன்னமும் கூட சிறப்பான முறையில் சார்பட்டா திரைப்படத்தில் வருவது போல் கொடுத்திருக்கலாம். மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அயற்சி இல்லாமல் நகர்ந்து நிறைவான படமாக முடிந்திருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/11/434-2026-09-11-15-32-18.jpg)
நடிகர் சூரி நாயகனாக இந்த படத்தில் தன் உடல் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். இந்த படம் எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். படத்தின் பெரும்பகுதியான காட்சிகள் நடுக்கடலில் எடுத்திருப்பதால் அதில் நடிப்பது மிக மிக சிரமம். அதை தன் பிட்னஸ் மூலம் சிறப்பான முறையில் நடித்து சிறப்பான முறையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி. இருந்தும் முகபாவனைகள் வசன உச்சரிப்பு என சில விஷயங்களில் மட்டும் இன்னமும் சூரிக்கு மெனக்கிடல் தேவைப்படுகிறது. நாயகி மகிமா நம்பியார் அழகாக இருக்கிறார் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு எதார்த்தமான கதாபாத்திரம் அதையும் நிறைவாக செய்திருக்கிறார்.
படகு வீரராக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். வில்லனாகாவும், படகு வீரராகவும் மிரட்டி இருக்கிறார் தெலுங்கு புகழ் சுகாஸ். சுகாஸின் வில்லத்தனம் மிக மிக எதார்த்தமாகவும் மிரட்டலாகவும் அமைந்து படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. இவருக்கும் சூரிக்குமான மோதல் அனல் பறக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் சிறப்பான முறையில் வழக்கம் போல் தன்னுடைய டிரேட்மார்க் நடிப்பை அழகாக கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் சத்யராஜ். இவரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. நாயகனின் நண்பராக வரும் பால சரவணன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் ரவீந்திர விஜய் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/09/11/433-2026-09-11-15-32-26.jpg)
மிதுனின் காதலியாக வரும் கிருத்திகா சின்ன சின்ன முக பாவனைகளில் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். சினிமாவுக்கு அடுத்ததாக ஒரு நல்ல முகம் கிடைத்திருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக இருக்கிறது. வழக்கம்போல் தனது அதிரடியான இசையை இந்த திரைப்படத்திற்கும் சிறப்பான முறையில் கொடுத்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக பிரம்மாண்டம். முக்கியமாக நடுக்கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு நம்மை அந்த நடுக் கடலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அந்த அளவு சிறப்பான முறையில் நேர்த்தியாகவும் மிகக் கடுமையான உழைப்பை படக்குழு கொடுத்து இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதற்கு கூடுதல் பாராட்டுக்கள். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை மிக மிக சிறப்பாக செய்திருப்பது படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்து கரை சேர்க்க உதவி இருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒரு கதைக்களத்தை வைத்துக்கொண்டு குறிப்பாக பாய்மர படகு போட்டியை சிறப்பான முறையில் காண்பித்து அதை மேக்கிங் செய்த விதமும் மிக மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பான முறையில் கொடுத்திருப்பதும் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ்-ஆக அமைந்து கதையும் திரைக்கதையும் இன்னும் கூடுதலாக வேகத்தை கொடுத்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை பார்த்த உணர்வை இந்த மண்டாடி கொடுத்து இருக்கிறார்.
மண்டாடி – மாஸ் காட்டி!
