வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களது பெற்றோரின் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக, கடந்தாண்டு ஜன.,ல் இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றார். அதில் இருந்து, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா விதிகளில் பல கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. தற்போது, அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வாங்கும்போது பெற்றோர் தங்களுடைய உறவை நிரூபித்து, புகைப்பட அடையாள அட்டையைக் காட்டினால் போதும்.
ஆனால் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பெற்றோர் தங்களுடைய அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். அந்நாட்டின் 14-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் முயற்சி இது என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.
